தஞ்சாவூர் சோழ மண்டல நாணயவியல் கழகம் சார்பில் நாணய கண்காட்சி

தஞ்சாவூர் சோழ மண்டல நாணயவியல் கழகம் 19 ஆவது ஆண்டு விழாவும் 26வது தொல்லியல் வரலாறு கல்வி சார்ந்த மாணவர்களுக்கான பண்பாட்டு நாணய கண்காட்சி கல்லுகுளம் மக்கள் மன்றத்தில் துவங்கியது.
கண்காட்சியினை சோழ மண்டல நாணயவியல் கழக தலைவர் செந்தில் பழனிவேல் திறந்துவைத்தார். நிறுவனர் தேசிய நல்லாசிரியர் துரைராசு தமிழ் காசுகளில் பாண்டிய மன்னர், மலையமான் சேர மன்னர் ஆரிய மன்னர் ,பல்லவ மன்னர், குறுநில மன்னர் உள்ளிட்டோரின் தமிழ் காசுகளை காட்சிப்படுத்தி விளக்கினார். மேலும் வித்தியாசமான மதிப்பு பணத்தாள்கள், நாணயங்களும் பல்வேறு வடிவங்களும், எழுதுகோல்கள், சோழர் காலத்து உண்டியல்கள், கடவுள் பெயரில் தமிழ் காசுகள், ஆற்காடு நவாப் வெளியிட்ட காசுகள், பண்டைக்கால சீன தேசத்து நாணயங்களில் பல்வேறு வடிவங்கள் கொண்ட காசுகள், மூங்கில் மரத்திலான காசுகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தியிருந்தார்.
படைக்கலன்களில் குத்துவாள், ஈட்டி, வளரி என நாயக்கர், மராட்டியர் கால ஆயுதங்களை காட்சிப்படுத்தி விளக்கினார்.


செயலாளர் பூபதி ,பொருளாளர் மோகன் உள்ளிட்டோர் சங்கு சிப்பி உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் படிமங்களை காட்சிப்படுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கினார்கள்.
பள்ளி மாணவ, மாணவர்களுக்கு வரலாற்றை எடுத்துக் கூறும் விதமாக வினாடி-வினா போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் காயின் சொசைட்டி தலைவர் ரவிச்சந்திரன், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், கும்பகோணம் தொல்லியல் நாணயவியல் சங்க தலைவர் முத்தையா, முஹம்மது சுபேர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
