கொங்கணவர்(பதினெண் சித்தர்கள்….12)

0

பிறப்பும் குடும்ப வாழ்க்கையும்

கொங்கணவர் கொங்கு நாட்டில் சங்கர குலத்தில் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் (தனுசுராசியில்) பிறந்தவர் (போகர் 7000/5908,5909) கொங்குநாட்டில் ஊதியூர் மலைப்பகுதியில் அவர் பிறந்து வாழ்ந்ததால் அம்மலை கொங்கணகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

அவருடைய தாய் தந்தையர் இரும்பை உருக்கி பாத்திரங்கள் செய்து கோயில்களின் வாயில்களில் உட்கார்ந்து விற்றுவந்தனர். அவர்கள் யோகிகளுக்கும் சாதுக்களுக்கும் மனம் உவந்து தொண்டு செய்து வந்தார்கள். கொங்கணவர் பதினாறு வயதிலேயே இரும்புப் பாத்திரங்கள் செய்வதில் நிபுணராகி விரைவில் பாத்திர வியாபாரத்தில் பெரும் வணிகரானார். திருமணம் செய்து கொண்டு சீராகக் குடும்ப வாழ்க்கையும் நடத்தினார். அதோடு முனிவர்களைப் பெரிதும் உபசரித்து வந்தார். அம்முனிவர்களும் அகமகிழ்ந்து இவருக்கு மெய்ஞ்ஞானத்தை ஊட்டி வந்தனர். அதனால் அவர் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவியானார்.(அகத்தியர் 12000/4வது காண்டம் 414 ஆம் பாடல்).

பளிங்கரான வரலாறு

விரைவிலேயே அவர் கூடுவிட்டுக் கூடு பாய்தல் முதலான அஷ்ட மாசித்திகளையும் பெற்று மகாசித்தரானார். ஒரு சமயம் அவர்;; மலைச்சாரல்களிலுள்ள காடுகள் வழியே சென்று கொண்டிருந்தபோது மலைவாழ் பளிங்கர் இனத்தைச் சேர்ந்த ஒருவன் இறந்து கிடந்ததைக் கண்டார். அவன் இனத்தவர்கள் கதறி அழுததைக் கண்டு அவர்கள் மீது இரக்கமுற்றுத் தன் சரீரத்தை விட்டு அந்தப் பளிங்கனின் சரீரத்தில் புகுந்து ஒரு பளிங்கனாகவே மாறிவிட்டார். அவர் மறைத்து வைத்திருந்த அவரது உடலைக் கண்ட பளிங்கர்கள் அதை எரித்து சாம்பலாக்கி விட்டனர். அது முதல் அவர் ஒரு பளிங்கனாகவே கடைசிவரை வாழ்ந்துவந்தார். (கருவூரார் வாத காவியம் 7000/பாடல்கள் 217,218)

அதன்பிறகு போகர் அவருக்கு குருவாக அமைந்தார். போகரிடம் ஞானம் பெற்ற பின் அகத்தியரிடமும் சீடராயிருந்து தவயோகத்தில் ஈடுபட்டு சித்தராக வாழத் தொடங்கினார்.

கொக்கை எரித்த கதை

தவயோகத்தில் முழு நிறைவு பெற்ற கொங்கணவர் ஆதிபரம்பொருளை நோக்கி நீண்ட காலம் ஆனந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். ஒரு நாள் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கொக்கொன்று எச்சமிட அது இவர் கண் இமையில் பட்டது. அதனால் கோபக்கனல் பொங்க விழிப்புற்றவர் கொக்கை அண்ணாந்து பார்க்க அது சுட்டெரிக்கப்பட்டு எரிந்து சாம்பலாகிக் கீழே விழுந்தது.

food

பலகாலம் உணவின்றி இருந்ததால் பசி வயிற்றைக் கிள்ள அவர் அருகில் இருந்த திருவள்ளுவர் வீட்டிற்குப் பிச்சைக்குச் சென்றார். வள்ளுவர் மனைவியாகிய வாசுகி அம்மையார் கணவருக்கு உணவு பரிமாறி நிறைவாகப் பணிவிடை செய்து முடித்துவிட்டு சிறிது தாமதித்து சித்தருக்குப் பிச்சை இட வந்தார். அதனால் அவர் கோபக் கனல் தெறிக்க அந்தக் கற்பரசியைப் பார்க்க அவர் அமைதியான புன்முறுவலுடன் ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்க அவர் வெட்கித் தலைகுனிந்து சென்றார். இச்சம்பவம் “கொங்கணவர் வாத காவிய”த்தில் இடம் பெற்றுள்ளது.

திருமழிசை ஆழ்வார் சந்திப்பு

அவர் வழிப்பயணத்தில் திருமழிசை ஆழ்வாரை சந்தித்தார். தான் வைத்திருந்த ரசக்குளிகையைக் காண்பித்து, இது காணிகோடியை பேதிக்கும் என்றார். ஆனால் ஆழ்வாரோ தன் உடம்பின் அழுக்கைத்; திரட்டிக்கொடுத்து இது காணிகோடாகோடியைப் பேதிக்கும் என்றார். கொங்கணவர் ஆழ்வாரின் பெருமையை உணர்ந்து அவரை வணங்கி விடைபெற்றுத் தன் பயணத்தை தொடர்ந்தார்.

கௌதமர் தொடர்பும் நிறைநிலை அடைவும்

அவர் ஒரு மலை அடிவாரத்தை அடைந்தபோது அங்கே தம் உள்ளுணர்வில் இன்பமயமான தெய்வீகத் தோற்றங்கள் பலவற்றைக் கண்டார்.அதோடு இனிமையான பல வாத்திய ஒலிகளையும் கேட்டார். அதைத் தொடர்ந்து அங்கே கௌதம ரிஷி ஒரு சமாதியிலிருந்து வெளிப்பட்டார். அவர் உபதேசம் பெற்ற கொங்கணவர் தன் தவவலிமையை மேலும் பெருக்கிக் கொள்ள பனிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். மிக்க தவ வலிமையுடன் வெளிப்பட்ட கொங்கணவர் தான் ஒரு சர்வசக்தி வாய்ந்த ரிஷியாக உயர வேண்டும் என்ற ஆசையில் ஒரு யாகம் செய்யத் தொடங்கினார். அப்போது ஒளி உடலுடன் அவர் முன் தோன்றிய கௌதமர், தகுதிக்குமேல் ஆசைப்பட்ட கொங்கணவரை சபித்துவிட்டார். கொங்கணவர் கௌதமரை வணங்கி சாபவிமோசனம் கேட்க முனிவர், ‘சாபவிமோசனம்  பெற தில்லைவனத்திற்கு போ’ என்று கூறிவிட்டு மறைந்தார்.

தில்லைவனம் சென்ற கொங்கணவர் முன் பராசர முனிவர் தோன்றி ‘சாபவிமோசனம் அளித்தார். அதன்பிறகு கௌதமர் அங்கு தோன்றி யாகம் செய்ய வரமளித்தார். இவ்வளவு நல்வரங்கள் பெற்ற நிலையிலும், கொங்கணவர் தம் மனதில் ஏதோ குறை இருந்து வருவதை உணர்ந்து தன் குருநாதரான போகரிடம் சென்று சரணடைந்தார். குருவின் ஆணைப்படி திருமாளிகைத் தேவரிடம் சென்று நிர்வாண தீட்சை  முதலான அரிய தீட்சைகளைப் பெற்று உயர்ந்த சித்தராக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தார். அங்கு அவரிடம் 500க்கும் அதிகமான சீடர்கள் சேர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் ஞானமார்க்கத்திலும் குளிகை மார்க்கத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கினார்கள்.

திருப்பதி சென்று சமாதி கூடல்

தமக்கு சமாதி கூடும் காலம் கூடி வந்து விட்டதை உணர்ந்த கொங்கணவர் திருத்தணிகை சென்று வீரட்டகாசமூர்த்தியின் தலைமேல் தம் குளிகையை வைத்தார். லிங்க வடிவில் இருந்த அந்த சிவமூர்த்தி அக்குளிகையை நீராக்கி அழித்து விடாமல் தம்முள் ஈர்த்து மறைத்துக் கொண்டார். தன் தவறை உணர்ந்த சித்தர் சிவபெருமானைப் பணிந்து வழிபட்டு தம் குளிகையைத் திரும்பப் பெற்றார். அதன் பிறகு நேரே திருப்பதி சென்று திருவேங்கட மலை மீது தவத்தைத் தொடங்கினார். அப்போது வனேந்திரன் என்ற சிற்றரசன் அவரிடம் வந்து சீடனானான். அவனுக்கு ஏற்ற எளிய முறையில் தவ வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டு அங்கேயே ஜீவசமாதி அடைந்தார். இப்போது அவர் திருப்பதி மலைமீது அருள்மிகு வெங்கடேசப் பெருமாளாக இருந்து கோடிக்கணக்கான பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருவதுடன் நாடி வருபவர்களுக்கெல்லாம் வளமான வாழ்வளித்தும் வருகிறார்.

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.