தமிழ்நாகை தந்த இராமதேவர் (பதினெண் சித்தர்கள்….10)

0
1

தோற்றம்

இராமதேவர் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவர் புலத்தியரின் சீடர் என்பதை “பரிபாஷை விளக்கம் இருபத்தேழு” என்ற நூலின் காப்புச் செய்யுளில்

2

“குண்டலிதான்பூண்ட புலத்தியர்தன் பாதம்

குருமொழிதான் ஆயிரத்தின் பீடம் போற்றி”

என்று தெளிவாகப் பாடியுள்ளார்.

இவர் வைணவ பிராமண குலத்தில் மாசி மாதம் பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் (சிம்ம ராசியில்) பிறந்தவர் என்று போகர் “போகர் 7000” என்ற நூலில் கூறியுள்ளார். குருவருளால் இவர் குண்டலினி யோகம் செய்து மகாசக்தியாகிய மனோன்மணி தன்னுள் இருந்து தன்னை வழிநடத்திச் செல்வதை உணர்ந்தவர்.  அவர் “இராமதேவர் பூஜா விதி” என்ற சிறு நூலின் காப்புச் செய்யுளை

“ஆதியென்ற மணிவிளக்கை அறியவேணும்

அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும்”

எனத் தொடங்கி அதில் வாலைத் தெய்வத்தின் வழிபாட்டு மந்திரம். வாசியோகம், சாகாக்கலை ஆகியவற்றை விளக்கியுள்ளார். அதில் இறைவனுக்கு செய்யும் பூஜைகள் வீண் போகா என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

நாகையில் சட்டை நாதர் பிரதிஷ்டை

அவரது உள்ளத்தில் காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்ற பேரவா எழுந்தது. தன்னை மறந்து நடைப்பயணமாகவே காசி சென்றடைந்தார். அங்கே விஸ்வநாதரை மனமுருகத் தொழுதுவிட்டு வந்து கங்கையில் மூழ்கியபோது அவர் கையில் சட்டைநாத சுவாமியின் விக்ரகம் கிடைத்தது. அந்த லிங்கத்தைக் கொண்டு வந்து நாகையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழவே சற்றும் தாமதிக்காது உடனே விண்வழியே நாகை வந்து அதைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தார்.

சட்டைநாதர் அருளால் அவருக்கு பல்வேறு சித்திகளும் பல சித்தர்களின் தொடர்பும் கிடைத்தன. அந்த சட்டை நாதர் இப்போது நாகையில் நீலாயதாட்சி உடனுறை காயாரோகணசுவாமி கோவிலின் தென்மேற்கில் ஒருகல் தொலைவில் தனிக்கோவில் கொண்டு அருள்மிகு சட்டையப்பராக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.

அவர் மெக்கா செல்லல்

இராமதேவர் முகம்மதியராக மாறியபிறகு ‘யோகோபு வைத்தியவாத சூத்திரம்’ என்ற நூலை எழுதியுள்ளார். தான் மெக்கா சென்றதற்கான முக்கிய காரணத்தை அதில் அவர் விளக்கியுள்ளார். அக்காரணமாவது:

இராமதேவர் “கைலாச சட்டைநாதர் தீட்சை இருநூறு’ என்ற நூலை எழுதி முனிவர்களின் தலைவரான திருமூலரிடம் கொடுத்தார். திருமூலர் அதைக்கிழித்தெரிந்தார். அப்போது அங்கிருந்த அகத்தியர் முதலான முனிவர்கள் ‘இதை ஏன் கிழித்தீர்?’ எனக்  கேட்க திருமூலர் பதில் ஏதும் கூறவில்லை. அடுத்து இராமதேவர் அதே வினாவை விடுத்தபோது “நீ கேட்க வேண்டா. மேட்டினம் பேசாதே. போ.போ!” என்று கடிந்து கொண்டார்.

அப்போது அரபு நாட்டு வணிகர்கள் அடிக்கடி கப்பலில் நாகைக்கு வந்து போய்க்கொண்டிருந்தனர். அப்போது அரபு நாட்டுப் பாலை நிலைத்தில் அபூர்வமான கல்ப மூலிகைகள் நிறைய வளர்ந்திருந்தன என்று பல சித்தர்கள் இராம தேவரிடம் கூறியிருந்தனர். இவ்விரு காரணங்களாலும் எப்படியும் மெக்கா சென்று வர வேண்டும் என்ற எண்ணம் சித்தர் மனதில் ஆழப்பதிந்தது. ஒருநாள் அதே எண்ணத்தில் இராமதேவர் தன்னை மறந்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலை கலைந்து விழித்து பார்த்தபோது தான் அறியாமலே அவர் மெக்கா வந்திருப்பதை உணர்ந்தார்.

மெக்காவில் இராமதேவர்

மெக்கா மக்கள் எல்லோரும் இஸ்லாமியர். திடீரென்று வேற்று நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் அல்லாத ஒருவரைக் கண்ட அம்மக்கள் இராமதேவரைப் பார்த்து “நீ யார் எப்படி எங்கள் தீன் நாட்டிற்கு வந்தாய்? உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று பயமுறுத்தினர். “நான் ஒரு தவயோகி இங்கு நான் எப்படி வந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை” என்று இராமதேவர் கூற அங்கிருந்த முஸ்லீம் ஞானி ஒருவர் ‘இவர் கூறுபவை எல்லாம் உண்மை’ என்று கூறினார்.

மெக்கா மக்கள் ‘உன்னை நாங்கள் நம்புகிறோம். நீ முஸ்லீமாக மாறினால்தான் எங்கள் தீன் நாட்டில் வாழ முடியும்’ என்று கூறினர். இராமதேவர் முஸ்லீமாக மாறி யாக்கோபு என்ற புதிய பெயருடன் அந்த மக்களுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தார். அம் மக்களுக்கு உபதேசம் செய்தல், மருத்துவம் பார்த்தல் போன்ற பல வழிகளில் உதவி செய்து மெக்கா மக்கள் பேரன்புக்குப் பாத்திரராகி நீண்ட காலம் அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார்.

இந்த செய்திகள் யாவும் “போகர் 7000” என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.

ஒருநாள் நபிகள் நாயகம் ஒளி உருவில் யாகோபுக்குக் காட்சியளித்து தெய்வீக சாதனைகள் புரியும் நுட்பங்களை விளக்கி அருளினார். பின்னர் மகாசித்தரான போகர் அவர்முன்தோன்றி கொஞ்ச காலம் மக்கள் தொண்டு செய்துவிட்டு ஜீவ சமாதி அடையும்படி கூறி மறைந்தார். போகர் கூறி படி மக்கள் தொண்டு செய்து வந்த யாகோபு சித்தர் காற்றையே உடலாகக் கொண்ட காலங்கிநாதரின் ஆசிபெற விரும்பி அவரை நினைத்து கடுந்தவம் புரிந்தார். காலங்கிநாதர் அருளுடலுடன் தோன்றி, ஜீவசமாதி கூடி மரணமிலாப் பெருவாழ்வு வாழ வாழ்த்துரை கூறி மறைந்தார். யாகோபு சித்தரும் ஜீவசமாதி கூடி தவம்புரியத் தொடங்கினார்.

40 வருடக் கடுந்தவம்

அவர்தம் சீடர்களை அழைத்து “நான் பூமிக்கடியில் தவம் செய்யப் போகிறேன். பத்து ஆண்டுகள் கழிந்துதான் வெளிப்படுவேன்” என்று கூறி ஒரு குழிதோண்டி அதில் இறங்கி சமாதிபூண்டார். கொஞ்ச நாளில் அவருடைய சீடர்கள் எல்லோரும் யாகோபு இறந்துவிட்டார். இனிமேலா வெளியில் வரப்போகிறார்? என்று கேலியாகப் பேசிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றனர். காலப்போக்கில் அவர்களில் சிலர் இறந்து விட்டனர். பலர் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரே ஒரு சீடர் மட்டும் குருமீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையுடன் 10 ஆண்டுகளும் அவருடைய சமாதிக்கு அருகிலேயே தங்கியிருந்து தவ வழிபாடு செய்து வந்தார்.

யாகோபு, தாம் குறிப்பிட்டு சொன்னது போல் பத்தாண்டு முடிவில் சமாதி கலைந்து வெளியே வந்தார். அவர் வெளிப்பட்டதும் அங்கேயே தங்கியிருந்த சீடர் குருவிடம் நடந்தவைகளையெல்லாம் கூறினார். அவற்றைக் கேட்ட குருநாதர், ‘நான் மீண்டும் சமாதி கூடிச் செல்கிறேன். திரும்பிவர முப்பதாண்டுகள் ஆகும். நான் சமாதிக்குள் போனவுடன் என்னை கேலி பேசியவர்கள் எல்லோரும் கண் குருடாகிவிடுவார்கள்” என்று கூறிவிட்டு மறுபடியும் சமாதிக்குள் சென்றுவிட்டார். அவர் சமாதி கூடிய அதே நேரத்தில் கேலி செய்த சீடர்கள் யாவரும் குருடராயினர். இம்முறை அவர்கள் தாங்கள் செய்த குற்றங்களை உணர்ந்து திரும்பி வந்து சமாதிக்கு அருகிலேயே குருவழிபாடு செய்து கொண்டிருந்தனர். முப்பதாண்டு கழித்து வெளிப்பட்ட குருநாதர் அவர்கள் செய்த குற்றங்களை மன்னித்தார். சீடர்கள் யாவரும் கண்பார்வை பெற்றனர். யாகோபு அவர்களுடன் சில காலம் தங்கியிருந்து அவர்களுக்கு பல உபதேசங்களை செய்ததுடன் பல மருத்துவ நூல்களையும் எழுதிக்கொடுத்துவிட்டுத் தமிழகம் வந்தார்.

கடைசிக்காலமும் ஜீவ சமாதியும்

தமிழகம் வந்த யாகோபு மீண்டும் இராமதேவராக மாறி சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு வனத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் தாம் அரபு மொழியில் எழுதிய மருத்துவ நூல்களை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் தங்கியிருந்த வனம் இராமதேவர் வனம் என்றே அழைக்கப்படுகிறது.

அவருக்கு நிரந்தரமாக ஜீவசமாதி கூடும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். உடனே அவர் சதுரகிரியை விட்டு அழகர் மலைக்குச் சென்றடைந்து அம்மலைமேல் ஜீவசமாதி அடைந்தார். அவர் ஜீவசமாதி அடைந்தவிடத்தில்தான் இப்போது பழமுதிர்ச்சோலை முருகன்கோயில் உள்ளது. அந்த முருகன் கோவிலில் சித்தர்பிரான் இராமதேவர் அருள்மிகு முருகக் கடவுளாக இருந்து அருளாட்சி புரிந்து வருகிறார்.

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.