திருச்சி கோர்ட்டில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்

0
D1

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முகிலன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, இதன் பின்னணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பற்றிய வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன் என்று பேட்டி அளித்த மறுநாள் முதல் முகிலன் திடீர் என மாயமானார். அவர் என்ன ஆனார்? எங்கே போனார் என தெரியவில்லை. போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி ரெயில் நிலையத்தில் கடந்த 10-ந்தேதி முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார். ஆந்திர மாநில போலீசார் அவரை தமிழ்நாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். முகிலன் மீது ஏற்கனவே குளித்தலையை சேர்ந்த ஒரு பெண், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகிலனை கைது செய்து கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கும்படி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீது நடந்த விசாரணையின்போது முகிலனை போலீசார் கரூர் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்துவதற்காக கடந்த 23-ந்தேதி அழைத்து சென்றனர். அப்போது தனது மேல் சட்டையை கழற்றி கையில் வைத்தபடி வந்த முகிலன் சிறையில் என்னை கொல்ல சதி நடக்கிறது என கோஷம் போட்டார். மேலும் தனக்கு சிறையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி தனது வக்கீல் மூலம் ஒரு மனுவையும் தாக்கல் செய்தார்.

 

கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 மணி நேரம் முகிலனிடம் தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

D2
N2

இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் போலீசார் திடீரென முகிலனை திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு திருவேணி முன் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அறைக்குள் வந்ததும் மாஜிஸ்திரேட்டு திருவேணி, முகிலனை ஒரு பெஞ்சில் உட்காரும்படி கூறினார். இதனை தொடர்ந்து அவரிடம் உடல் நலம், குடும்ப சூழல் தொடர்பாக சில கேள்விகள் கேட்டார். சிறையில் நல்ல முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டார். அதற்கு முகிலன் உணவு நன்றாக வழங்குவதாக பதில் அளித்தார்.

 

இதனை தொடர்ந்து ஒரே ஒரு பணியாளரை தவிர மற்ற பணியாளர்கள் மற்றும் வக்கீல்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கோர்ட்டு அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டன. சுமார் 2 மணி நேரம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் முகிலன் அளித்த ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. முகிலனின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து திருச்சி மத்திய சிறை அதிகாரி (ஜெயிலர்) ரமேசிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

 

கோர்ட்டில் இருந்து முகிலன் வெளியே வந்தபோது, சிறையில் 22-ந்தேதி நடந்தது என்ன என்பதை நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருக்கிறேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தமிழக அரசு வடமாநில போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது என்றும், நியாயம் கேட்டால் போலீஸ் மூலம் அடக்கி அராஜகம் செய்கிறது, என வும் கூறினார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேச விடாமல் வேனுக்குள் தள்ளினார்கள். அதன்பின்னர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

முகிலனின் வக்கீல் கென்னடி கூறுகையில், ‘கரூர் கோர்ட்டில் முகிலன் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் அவரிடம் திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது’ என்றார்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.