திருவெறும்பூரில் கோவில் உண்டியலை பெயர்த்து பணம் கொள்ளை

0
gif 1

திருச்சி திருவெறும்பூரை அடுத்த போலீஸ்காலனியில் பிரசித்தி பெற்ற ஞான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும், கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் வீட்டுக்கு சென்று விட்டார்.

gif 4


பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க அர்ச்சகர் வந்தார். அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தார். அங்கு, கோவில் உண்டியல் பெயர்க்கப்பட்டு, கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

உடனே அவர் இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போட்டுப்பார்த்தனர்.

அதில், விநாயகர் கோவிலின் முன் கதவின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே சென்று, கோவிலின் உண்டியலை இரும்பு கம்பியால் பெயர்த்து எடுத்துச்சென்று, கோவிலின் பின்புறம் அமர்ந்து, உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் உண்டியலை உடைத்து பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.