திருச்சியில் பைக் வாங்கினால் ஹெல்மெட் இலவசமாக கொடுக்க உத்தரவு !

திருச்சியில் உள்ள பைக் ஷோரூம்களில் இனி பைக் வாங்குபவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே சாலை விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் அதிகம். ஹெல்மெட் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டாலும் விபத்துகளும் உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை.

அரசு தரப்பிலும் போக்குவரத்து காவல் துறை சார்பிலும் விபத்துகளைக் குறைக்கத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கும் விதத்தில் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் ஹெல்மெட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையம் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், திருச்சியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையங்களில் பைக் வாங்கும்போது இலவசமாக ஹெல்மெட்டையும் வழங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 11 போக்குவரத்து காவல் அதிகாரிகள், போக்குவரத்துத் துறையினர் இடையேயான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் பைக் வாங்கும்போதே ஹெல்மெட்களையும் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பைக் ஷோரூம்களில் புதிதாக பைக் வாங்கும்போதே அதனுடன் ஹெல்மெட் ஒன்றும் இலவசமாக வழங்கவேண்டும் என்று போக்குவரத்துத் துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், பைக்குடன் ஹெல்மெட் வழங்கிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே வாகனப் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பைக் விற்பனை நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறை துணை ஆணையரான ஏ.மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பு புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு மூன்று சாலை விபத்துக்கும் ஒரு விபத்து இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நடைபெறுவதாகவும், இருசக்கர வாகன விபத்தைச் சந்திப்பவர்களில் 73 சதவிகிதத்தினர் ஹெல்மெட் அணிவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
