மாங்குளம் தமிழி கல்வெட்டுகள்

0
1

புலிமான்கோம்பை நடுகல் கல்வெட்டு கண்டறியும் முன் தமிழின் தொன்மையான கல்வெட்டாக இது கருதப்பட்டது. வட இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன. “தமிழி” யில் வர்க்க எழுத்துக்கள் இல்லை. கூட்டெழுத்து முறைகளும் இல்லை.அதுபோல் தமிழ் எழுத்துக்களில் உள்ள ழ, ள, ற, ன வடிவங்கள் வட இந்திய பிராமியில் இல்லை. தாய்லாந்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும், எகிப்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் தமிழி என இனங்கண்டது ‘ற’ என்ற தமிழ் ஒலிக்கான பிராமி எழுத்தே ஆகும். இதுவே தமிழின் தனித்தன்மையை கூறும். இந்தியாவில் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி எழுத்துகள் பிராகிருத மொழியில் இருக்கும் பொழுது, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மட்டுமே பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்துக்களை வட இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி உணர்த்தும் பொருட்டு இவை தமிழ் பிராமி அல்லது தமிழி என்று அழைக்கப்படுகிறது.
மதுரை-திருச்சி புறவழிச்சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவில் மேலூர் அருகே இவ்வூர் உள்ளது. மீனாட்சிபுரம் என்றும் மாங்குளம் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது! இங்குள்ள குன்றுகள் கழுகுமலை, ஒவாமலை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 1882 ம் ஆண்டு ராபர்சீவல் எனும் ஆங்கிலேயர் இக்கல்வெட்டுகளை கண்டறிந்தார். இங்கு மொத்தம் ஆறு கல்வெட்டுகள் உள்ளது. இக்கல்வெட்டுகள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவையென கணிக்கப்படுகிறது. இதிலுள்ள ஓர் கல்வெட்டில் நெடுஞ்செழியன் எனும் பெயர் வருகிறது! இந்த நெடுஞ்செழியன் மதுரைக் காஞ்சி குறிப்பிடும் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கும் முற்பட்டவன். வரலாற்று உலகிற்கு மேலும் ஒரு புதிய நெடுஞ்செழியன் இவராவார்.

முதல் கல்வெட்டு:
1.கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்
2.இத்தா அ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
3.வழுத்திய் கொட்டுப்பித்த பழிஇய்
இக்கல்வெட்டு முதல்குகைத்தளத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கணிநந்த ஸிரிய்குவ்அன் என்பவருக்கு தர்மமமாக நெடுஞ்செழியனின் அலுவலர் கடலன் வழுதி என்பவர் இந்த பள்ளியை ஏற்படுத்தி கொடுத்தார் என்பது இதன் பொருள். பணஅன் என்ற சொல்லிற்கு அரசரின் அலுவலர் என்பது இதன் பொருள்.

2

இரண்டாம் கல்வெட்டு:
கணிய் நந்திய் கொடிய்அவன்
இந்த கல்வெட்டும் முதல்கல்வெட்டு அமைந்த இடத்தின் அருகேயே உள்ளது, கணிநந்தி இக்கல்வெட்டை வெட்டியவன் என பொருள்கொள்ளலாம்.
கொடிய்அவன் என்பதுடன் ட் சேர்த்துபடித்தால் கொட்டியவன் ( வெட்டியவன்) என பொருள் கொள்ளலாம். அதாவது மேலே கண்ட முதல் கல்வெட்டினை கணிய்நந்தி வெட்டியதாய் பொருள் கொள்ளலாம்.

மூன்றாம் கல்வெட்டு:
1.கணி நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்
2.ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்
கணிநந்திஸிரிகுவனுக்கு இந்த கற்படுக்கையை(பள்ளி) தானமாக, நெடுஞ்செழியனின் சகலையான ( ஸாலகன் என்பதற்கு மனைவியின் உடன்பிறந்தவள் கணவன் என பொருள்) இளஞ்சடிகனின் மகன் தந்தை சடிகன் அமைத்து கொடுக்கிறார் என பொருள் கொள்ளலாம்.

4

நான்காம் கல்வெட்டு:
1.கணிஇ நந்திஸிரிய்குவ(ன்) …வெள்கறை நிகமது காவிதிஇய்
2.காழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன்
கணிநந்திஸிரிய்குவனுக்கு வெள்ளைறை நிகமத்தை சேர்ந்த காவிதியான கழிதிக அந்தையின் மகன் அஸீதன் இந்த உறைவிடத்தை அமைத்துக் கொடுத்தான் என பொருள் கொள்ளலாம்.

ஐந்தாம் கல்வெட்டு:
சந்தரிதன் கொடுபிதோன்
சந்தரிதன் என்பவன் இந்ந உறைவிடம் அமைத்துக்கொடுத்தான் என்பது இதன் பொருள். கொடுபிதோன் எனும் வரியில் ட் சேர்த்து கொட்டுப்பித்தோன் என பொருள் கொள்ளப்படுகிறது.

ஆறாம் கல்வெட்டு:
வெள்அறை நிகமதோர் கொடிஓர்
வெள்ளறைய சேர்ந்த நிகமத்தோர்(வணிகக் குழுவினர்) கற்ப்படுக்கையை அமைத்துக் கொடுத்தனர் என பொருள். கொடிஓர் இடையில் ட் சேர்த்தால் கொட்டியோர் என படிக்கலாம்.

இந்த கல்வெட்டுகளின் வாயிலாக அறிவது யாதெனில், பாண்டியரின் பட்டப்பெயர்களாய் சிறப்பித்து கூறப்படும் கடலன் வழுதி முதலிய பெயர்கள் வருகிறது! இதில் வழுதி என்பது பாண்டியனின் குடிப்பெயராகும். கடலன் என்பதற்கு நெய்தல் நிலத்தையும், பணவன் என்பதற்கு மருதநிலத்தினையும் உடையவன் என கூறலாம்.
கணிய்நந்திஸிரிய்குவன் என்ற பெயர்பதத்தை பிரித்துப் பார்த்தால் கணி+நந்திஸிரி+குவன் என பிரிக்கலாம். இதில் கணி என்பதற்கு முனிவர்களில் கணம்( கூட்டம்) என கூறலாம்,கணியன் பூங்குன்றனாரை இங்கு நினைவு கூறலாம்.நந்திஸிரி இவரது இயற்பெயராய் இருக்கலாம். குவன் என்பது குலப்பெயராய் இருக்கலாம். 8-9 ம் நூற்றாண்டு முத்தரையர் கல்வெட்டுகளில் குவாவன் என்ற பெயர் நிறைய வருகிறது! எனவே குவன் என்பது குவாவன் என்பதன் சுருக்கமாய் இருக்கலாம். இந்த கல்வெட்டில் வரும் வெள்ளறை எனும் ஊர் தற்போது மாங்குளம் அருகேயுள்ள வெள்ளரிப்பட்டி என கருதப்படுகிறது!

.

3

Leave A Reply

Your email address will not be published.