ஆதிமகள் 23

0
1 full

போகும் வழியில் இருந்த ஒரு பள்ளியின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பார்த்தபடி காயத்ரியும், அகிலாவும், மரத்தின் கீழிருந்த சிமெண்ட் பெஞ்ச்சின் மீது அமர்ந்திருந்தனர்.

மைதானத்தில் மூன்று நான்கு குழுக்களாக, வெவ்வேறு விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிய அனைத்து விளையாட்டுகளிலுமே, லாவகமாக, தந்திரமாக, தனது பலத்தை பயன்படுத்தி எதிர்தரப்பை ஏமாற்றி அவர்களை தோல்வியடைய செய்பவனே வெற்றியாளனாக அங்கீகரிக்கப்பட்டான்.

இதை கவனித்த காயத்ரிக்கு மொத்த உலகமுமே இதுபோன்று வெவ்வேறு வகையான விளையாட்டுக்களைத்தான் தங்களது வாழ்க்கை முழுவதுமே விளையாடிக் கொண்டிருக்கிறதோ, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுமே, வடிவமைக்கப்படாத, பல்வேறு விளையாட்டுக்கள் தானோ என்று கூட காயத்ரிக்கு தோன்றியது.

2 full

மீண்டும் சிறுவர்களால் வீசியெறியப்பட்ட பந்து, இவர்கள் காலடியில் வந்து விழுந்தது. இப்போது அந்த பந்தை அகிலா எடுத்து வீசியெறிந்தாள். பந்து சரியாக எந்த இலக்கை நோக்கி எறிந்தாளோ, அங்கேயே போய் விழுந்தது.

பந்தை வீசியெறிந்துவிட்டு, காயத்ரி அருகில் அமர்ந்த அகிலா, தன்வசமிருந்த துக்கத்தை துடைத்தெறிந்தவள் போல் காணப்பட்டாள்.

அகிலாவிடம் இப்போது உனக்கு என்ன பிரச்சனை என கேட்டு, பேச்சை ஆரம்பிக்கலாமா? என காயத்ரி யோசித்து கொண்டிருக்கும் போதே, அகிலா  பேச ஆரம்பித்தாள்.

“ஏன் காயத்ரி என்னோட அழுகை உன்னை ஏதும் பயமுறுத்திருச்சா” என்றாள்.

மெலிதாக சிரித்த காயத்ரி, ” பயமுறுத்தல அகிலா ஆச்சரியமா இருந்துச்சு உன்னோடு சேர்ந்து படித்த காலங்கள்ல, எதுக்குமே நீ இந்த அளவுக்கு கலங்கி, உடைந்து நான் பார்த்தில்லை. அதான் என்ன செய்யறதுன்னு தெரியாம, திகைச்சு போயிட்டேன். மத்தபடி பயப்படறதுக்கெல்லாம் இதுல என்ன இருக்கு. சரி சொல்லு என்னதான் பிரச்சனை உனக்கு” என்றாள் காயத்ரி.

இரண்டு கைகளையும் கோர்த்து, இரண்டு கால்களுக்கு நடுவே இருத்திக் கொண்டு, குனிந்தபடி அமர்ந்திருந்த அகிலா, ஒரு பெருமூச்சுடன் எழுந்து, மைதானத்தை வெறித்து பார்த்தபடி மௌனமாக நின்றாள்.

உட்கார்ந்திருந்த விதம், அவள் எழுந்து நின்ற தோரணை, எல்லாம் ஆணின் உடலிசைவை ஒத்திருந்தது போல் காயத்ரிக்கு தோன்றியது.

மௌனம் கூடுதலானது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் சில குழுக்கள் ஒருவருக்கொருவர் சத்தமிட்டபடி பேசிக்கொண்டே, மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒன்றிரண்டு சிறுவர்கள் நடு மைதானத்தில் உட்கார்ந்திருந்தனர். மைதானம் கடும் அமைதியானது. அந்த சூழலின் அமைதி, சிறுவர்களின் விளையாட்டிற்கு பின்  அங்கே குடிகொண்ட பேரமைதி, இந்த உலகிற்கு ஏதோ செய்தி சொல்கிறது. அதை எப்போது, எப்படி, என்னவாக புரிந்து கொள்வது,

சில நிமிடங்களில் மைதானத்தின் நடுவில் மீதமிருந்த சிறுவர்களும் எழுந்து வேகமாக ஓடி மைதானத்தை விட்டு மறைந்தனர். மைதானம் வெறிச்சோடி அசைவற்று கிடந்தது.

காயத்ரிக்கும், அகிலாவிற்கும் அந்நிலை புது அனுபவமாக இருந்தது. நிலவிய பேரமைதியில் காற்று மட்டும் ஜீவனைக் கொடுத்து ஜீவித்து வீசிக்கொண்டிருந்தது. இருவரின் மௌனமும் சிறிது நேரம் நீடிக்க, மெளனத்தை உடைத்தாள் காயத்ரி “சரி அகிலா உனக்கு இப்ப பேசனும்னு தோனலைன்னா பேச வேணாம். உன் மனசு இப்ப அமைதியா இருந்துச்சுன்னா என் கூட பேசி அந்த அமைதிய நீ கெடுத்துக்க வேணாம். இன்னொரு நாள் உனக்கு பேசனும்னு தோன்றப்ப நாம பேசிக்கலாம்” என்றாள்.

சட்டென காயத்ரியின் பக்கம் திரும்பிய அகிலா, “விளையாட்டும் இல்லை. விளையாடுனவங்களும் இல்லைன்னதும் இந்த இடமும் மைதானமும் எப்படி அமைதியாயிருச்சு பாத்தியா காயத்ரி. மைதானத்திற்கும் உயிர் இருப்பது போல் தெரியுது காயத்ரி.”

இதைக்கேட்ட காயத்ரி ஆமாம் உண்மைதான். ” ஆனால் இன்னும் கொஞ்சநேரம், அப்படி இல்லைன்னா நாளை, அல்லது நாளை மறுநாள் மீண்டும் இங்கு விளையாட்டும், கூச்சலும், வெற்றியும், தோல்வியும் களமாடத்தானே செய்யும் அகிலா” என்று காயத்ரி சென்னதும், “அப்ப இந்த அமைதியும் என்னோட அமைதியும் நிரந்தரம் இல்லைன்னு நீ சொல்ற அப்படித்தானே” என்றாள் அகிலா.

“நான் அப்படி சொல்லல இப்ப நாம நிக்கற சூழ்நிலைக்கு ஏத்த மாதிரித்தான் அகிலா, என்னால உன்கிட்ட பேச முடியும். நீ கேக்கிற இந்த ஆழமான அர்த்தமான கேள்விகளுக்கு என்கிட்ட பதில் இல்லை. ஆனா பொத்தாம் பொதுவா நான் உனக்கு ஒரு பதில் சொல்லனும்னா, நம்மளோட அமைதி, சந்தோஷம், துக்கம் எதுவா இருந்தாலும், அதுக்கு  நாம் மட்டும்தான் காரணம். இதுல இந்த உலகத்துக்கோ, மத்தவங்களுக்கோ, எந்தப் பங்கும் இல்லை. இந்த விஷயத்தில நான் உறுதியா இருக்கேன் அகிலா,” என கூறிவிட்டு, அகிலாவிடமிருந்த தனது பார்வையை மைதானத்திற்கு திருப்பியவள், புதிதாக விளையாட வந்து கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்த காயத்ரி அவர்கள் பக்கம் கைநீட்டி அகிலாவிடம் காண்பித்தாள்.

அவர்களை பார்த்த, அகிலா சிரித்தாள். சிரித்தபடியே காயத்ரியை பார்த்து, ஆமாம். அமைதி, துக்கம், சந்தோஷம்னு நம்ம வாழ்க்கையில நடக்குற எல்லா விஷயத்துக்கும் நாமதான் பொறுப்பு இதை மத்தவங்க மேல சுமத்துனா, அது அசிங்கம். கோழைத்தனம், பாசாங்கு, நீ சரியாத்தான் சொன்ன காயத்ரி, உன்கிட்ட நான் அழுததுக்கான காரணத்தை சொல்றதுக்கு முன்னாலயே, நாம் இரண்டு பேருமே நம்ம வயசுக்கு மீறுன பேச்சு பேசிட்டோமோன்னு தோனுதில்ல. மனசுக்கு கஷ்டம்னு வந்துட்டா தத்துவம் பேசுறது சுகமாத்தான் இருக்கு, ஆனா சந்தோஷத்துல வெற்றியின் களிப்பில இருக்கிறப்ப, இந்த மனசுக்கு எல்லா தத்துவங்களையும் ஏன் பிறருடைய வாழ்க்கையின் அனுபவங்களையும் கூட, விமர்சனமாவும், அலட்சியமாவும் தான் பார்க்க தோனுதுல்ல” என காயத்ரியிடம் கேட்டாள் அகிலா.

“இல்லை, நான் அப்படி இல்லை அகிலா” என மறுத்த காயத்ரி, சிறிது இடைவெளிக்குப்பின், “சரி நீ என்கிட்ட சொல்ல வந்தத சொல்லு” என கூறினாள்.

அகிலா ஒரு பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தாள்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.