திருச்சியில் நடந்த புதிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு எதிர்ப்பு.

0

பள்ளி கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து கலந்தாலோசனை கூட்டத்தை நேற்று திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் நடத்தின.

மாவட்ட பயிற்சி நிறுவன முதல்வர் வின்சென்ட் டி.பால், முதன்மை கல்வி அதிகாரி சாந்தி உள்ளிட்ட 7 மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டமானது திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு நடந்தது.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஜோசப் கல்லூரியில் நடப்பதும் கருத்து கேட்பு கூட்டமாகத்தான் இருக்கும் என கருதி, இந்த கூட்டம் தொடர்பாக மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படாமல் நடத்தப்படுவதாக பல்வேறு அமைப்பினர் குற்றஞ்சாட்டி கல்லூரி முன்பு திரண்டனர்.

‌சந்தா 1
சந்தா 2

இதையடுத்து தி.க., நாம் தமிழர் கட்சி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கூட்டம் நடைபெற்ற அரங்கில் போலீசாரின் தடுப்பை மீறி உள்ளே நுழைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூட்டம் நடந்த அரங்கில் மையப்பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டமும், தர்ணா போராட்டமும் நடத்தினர். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கூட்ட அரங்கில் இருந்து புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அப்போது, ‘நடத்தாதே, நடத்தாதே கருத்து கேட்பு கூட்டம் நடத்தாதே’ என்றும், இந்தியை திணிப்பதற்காக நடத்தப்படும் கூட்டம் என்றும், கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்தாமல் வெளிப்படையாக நடத்திட வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், பாதுகாப்பு கருதி கூட்டத்தில் பங்கேற்ற சில மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அங்கிருந்த ஆசிரியர்கள் பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர். கூட்டமும் பாதியில் நிறுத்தப்பட்டது.

பின்னர் அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தேசிய கல்வி கொள்கை இணை இயக்குனர் பொன்.குமார், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் தரப்பில், ‘இங்கு நடப்பது புதிய கல்வி கொள்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அல்ல. பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரி, பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற பணிமனை கூட்டம்’ என விளக்கம் அளித்தனர்.

அப்படியானால், இந்த கூட்டத்தை ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? என போராடிய அமைப்பினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள் தரப்பில், ‘இது ரகசியமாக நடத்தப்படும் கூட்டம் அல்ல. கருத்து கேட்பு கூட்டம் நடக்கும்போது வெளிப்படையாக நடத்தப்படும். முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்க கல்வித்துறை அதிகாரிகள் அனுமதியுடன், தேதி குறிப்பிட்டு கூட்டம் நடத்தப்படும்’ என்றனர். இருப்பினும் சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னரே போராட்டத்தை கைவிட்டு பல்வேறு அமைப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.