திருச்சி கோவிலுக்குள் அனாதையாக கிடந்த பெண் குழந்தை

திருச்சி உப்பிலியபுரம் கல்லாங்குத்து கிராமத்தில் 16/07/19 மாலை பெருமாள் கோவில் ஒன்றில் ஒரு குழந்தை தனியாக கிடப்பதாக அப்பகுதி சுகாதாரத்துறை அதிகாரி பழனிசாமிக்கு வந்த தகவலின் அடிப்படையில் சென்று பார்த்துள்ளார். பிறந்து 3 மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக இக்குழந்தை எப்படி வந்தது, யாருடையது என்று அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது இது யார் குழந்தை என்று தெரியவில்லை என்றும், கோவில் பூசாரி ராமு முதலில் பார்த்து விட்டு அருகில் ஆடு மேய்த்துக்கொண்ட ஆட்களிடம் குழந்தை ஒன்று கிடக்கிறது என்றும் அதன்மீது எரும்புமியிக்கிறது என்று கூறியதாகவும், உடனே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அன்பழகி என்பவர் குழந்தையை எடுத்து சுத்தம் செய்து தனது வீட்டிற்கு கொண்டுச்சென்று பாதுகாத்ததாகவும் கூறினர்.

மேலும் குழந்தையின் பாதுகாப்பு நலன் கருதி உடனே 108 ஆம்புலென்ஸ்ற்கு சுகாதாரத்துறை அதிகாரி தகவல் கொடுத்துள்ளார். இதனிடையே ஊர் மக்கள் தாங்களே குழந்தையை வளர்ப்பதாகவும், யாரிடமும் கொடுக்கமாட்டோம் என்று கூறி குழந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றவிடமல் மறுத்துள்ளனர், பின்னர் சுகாதாரத்துறை அதிகாரி குழந்தைகள் உதவி எண்ணிற்கு தகவல்(1098) கொடுத்தும், அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் காவலர்களின் உதவியுடன் குழந்தை துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் குழந்தையை தகுந்த வசதிகள் கொண்ட திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்து, பின்னர் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் மூலம் அன்று இரவே குழந்தைகளுக்கான அவசர உதவி வாகனம் திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டு குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் இக்குழந்தையை சமூகநலத்துறை அதிகாரிகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஜெ.கே….
