திருச்சியில் கிரிக்கெட் கொலை !

0
1 full

திருச்சியில் 10 வருடம் கழித்து கொலையில் முடிந்த கிரிக்கெட் தகராரு !

 

திருச்சி உறையூர் காசி செட்டி தெருவை சேர்ந்தவர் சபரிகிரிவாசன் (வயது 21). இவர் தில்லைநகரில் உள்ள ஓட்டலில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை சுப்ரமணியன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சபரிகிரிவாசன் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று 15.07.2019 கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணி அளவில் உறையூர் 80 அடி ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு கும்பல் சபரிகிரிவாசனை வழிமறித்தது. பின்னர் அவரை அரிவாளால் முகம் மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக வெட்டியது. மேலும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி விட்டு, அந்த கும்பல் தப்பிச்சென்றது.

சபரிகிரிவாசன்
2 full

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த சபரிகிரிவாசனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

 

கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போது, இரவு நேரம் என்பதால் அந்த கும்பலில் உள்ள யாருடைய முகமும் சரியாக தெரியவில்லை. இதற்கிடையில் சபரிகிரிவாசன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் 16.07.2019 காலை திரண்டனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த கொலை தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக சபரிகிரிவாசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

 

உறையூர் 80 அடி ரோடு செங்குளந்தான் கோவில் தெருவை சேர்ந்த விஜயனின் மகன் சந்தோஷ் (24). ராணுவ வீரரான இவர் அருணாசல பிரதேசத்தில் 20-வது பட்டாலியனில் வேலை பார்த்து வருகிறார். சந்தோஷ் மற்றும் சபரிகிரிவாசனின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆவர்.

10 வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் மற்றும் சபரிகிரிவாசன் இருவரும் சாலையில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட தகராரில் சபரிகிரிவாசன், சந்தோஷ் குடும்பத்தினரிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் அரிவாள் வெட்டு சம்பவமும் நடந்தது. இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

 

இந்தநிலையில் ராணுவ வீரர் சந்தோஷ் சொந்த ஊருக்கு வரும் போது, சபரிகிரிவாசனிடம் தகராறில் ஈடுபடுவாராம். கோவில் இடத்தின் அருகே சந்தோஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும் போது சபரிகிரிவாசன் தட்டிகேட்பாராம். இதனால் சந்தோஷ் கோபத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவு சந்தோஷ், அவரது தம்பி சரவணன், சரவணனின் நண்பர்கள் சேர்ந்து சபரிகிரிவாசனை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

 

இதற்கிடையில் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த சபரிகிரிவாசனின் உறவினர்கள், அந்த பகுதியை சேர்ந்தவர்கள், நண்பர்கள் என ஏராளமானோர், கொலை செய்தவர்களை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்துவதாக கூறி 16.07.2019 மதியம் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சந்தோஷ் உள்ளிட்டோரை கைது செய்யாவிட்டால் சபரிகிரிவாசனின் உடலை வாங்க மாட்டோம் என கோஷங்களை எழுப்பினர்.

 

இந்த மறியல் குறித்து தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்று பிரேத பரிசோதனை கூடம் முன்பு நின்றனர். சபரிகிரிவாசனின் உடல் பிரேத பரிசோதனை நடந்ததும் அவரது உடல் உறவினர்களிடம் நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் சபரிகிரிவாசனை கொலை செய்த ராணுவ வீரர் சந்தோஷ், அவரது தம்பி சரவணன், சரவணனின் நண்பர்கள் பிரவீன்குமார், நந்தகுமார், சரத்குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ராணுவ வீரர் கைது செய்யப்பட்டது குறித்து மாநகர போலீசார் மூலம் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முன்விரோதத்தில் திருச்சியில் கார் டிரைவரை ராணுவ வீரரும், அவரது தம்பியும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு முன் கோபம் கொலையில் முடிந்திருக்கிறது.

3 half

Leave A Reply

Your email address will not be published.