திருச்சியில் தனியார் பள்ளிக்குள் புகுந்த பெண்-குழந்தைகளை கடத்த முயற்சியா?

திருச்சி கருமண்டபத்தில் ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி பள்ளியில் விழா நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காரில் பள்ளிக்கு வந்தார். திடீரென பள்ளியில் புகுந்து அங்குமிங்கும் சுற்றினார்.

இதனைக் கண்ட ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம், நீங்கள் யார்?. யாரை பார்க்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் தனது பிள்ளை இந்த பள்ளியில் படிப்பதாகவும், அவரை பார்க்க வந்ததாகவும் கூறினார். விசாரித்தபோது, அப்படி யாரும் அங்கு படிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

பின்னர் அந்த பெண்ணிடம், உங்கள் தாய், தந்தை யார்? என்று கேட்டபோது, அரசியல் தலைவர்களின் பெயரை கூறினார். இதையடுத்தே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என தெரியவந்தது. உடனே பள்ளி நிர்வாகத்தினர் செசன்சு கோர்ட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த பெண்ணை அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் திருவெறும்பூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் அவருடைய பெயர் மற்றும் குடும்பத்தினர் பற்றி எதுவும் கூறவில்லை. இதையடுத்து அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வரும் பள்ளிகளில் இதுபோல் யாராவது மர்ம நபர்கள் திடீரென புகுந்து குழந்தை கடத்தலில் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பள்ளி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
-தினத்தந்தி
