திருச்சியில் பல லட்சம் மோசடி செய்த- மோசடி மன்னன் கைது

திருச்சியில் மோசடி கும்பலின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடிவருகிறது, ஆனால் காவல் துறையோ, இதுப்போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் விட்டுவிடுவதால், அவர்களை பார்த்து பலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் சுப்ரமணியபுரம் பகுதியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் சீட்டு ஆரம்பித்து அதன் மூலம் மக்களின் பணத்தை ஏமாற்றி சென்றார் டேவிட் என்பவர்.
மேலும் அதனைத்தொடர்ந்து…திருச்சியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜேசுவில்சன் (வயது 52). இவர் வெளிநாடு செல்வதற்காக திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரனிடம் (48) ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் ரவிச்சந்திரன், ஜேசுவில்சனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் ரவிச்சந்திரனிடம் கொடுத்த பணத்தை, ஜேசுவில்சன் பலமுறை திரும்ப கேட்டும் அவர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜேசுவில்சன், துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவின்பேரில் துவாக்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து, ரவிச்சந்திரனை பிடித்து விசாரணை நடத்தினார்.
இதில், ரவிச்சந்திரன் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 30 பேரிடம் கூறி, ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேல் என பல லட்சம் பணம் பறித்து இருப்பதும், சிலருக்கு போலி விமான டிக்கெட் கொடுத்தும், சிலருக்கு போலி விசா, போலி நிறுவன விலாசங்களை கொடுத்தும் ஏமாற்றியதோடு, சிலருடைய பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு தராமல் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார், அவரை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுப்போன்ற தொடர் மோசடி சம்பவங்கள் திருச்சியில் நிகழ்ந்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கண்டுக்கொள்ளுமா காவல்துறை
ஜெ.கே
