திருச்சியில் சிலை திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருச்சி, மலைக்கோட்டை பகுதியில் ராணி மங்கம்மாள் அரசு அருங்காட்சியகம் உள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு அருங்காட்சியகத்தில் இருந்த 31 சிலைகள் திருட்டு போனது. இச்சம்பவம் தொடர்பாக மலைக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, காரைக்குடியை சேர்ந்த சதீஷ்குமார்,47, ஆனந்தன்,44, சிவா,47, மற்றும் திருப்பத்துாரை சேர்ந்த சிவசிதம்பரம்,49, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 5 கோடி ரூபாய் மதிப்பிலான 21 சிலைகள் மீட்கப்பட்டது.
மேலும், சிலை திருட்டு சம்பந்தமாக, வெளி மாநிலங்களில் பதுங்கிய 5 பேரை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிலை திருட்டு வழக்கில் தொடர்புடையவர், உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக இந்திய– நேபாள எல்லையான சோனாலி என்ற இடத்தில் பதுங்கியிருந்த, காரைக்குடியை சேர்ந்த ராம்குமார்,35, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை, விமானம் மூலம் திருச்சி அழைத்து வரும் போலீசார் இன்று அதிகாலை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
ஜெ.கே….
