பற்றி எரியும் தீ ! அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

0
D1

பற்றி எரியும் தீ ! அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

 

 

ஆண்டுதோறும் காற்று காலத்தில் பற்றி எரியும் தீயினால் அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. ரூ.50 கோடியில் உரமாக்கும் திட்டம் 6 மாதமாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

 

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கடந்த 8-ந்தேதி பிடித்த தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. 5-வது நாளான நேற்றும் தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்களும், மாநகராட்சி ஊழியர்களும் இறங்கினார்கள். ஆனாலும் பற்றி எரியும் தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

 

D2

இதனால் குப்பைக் கிடங்கை சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், புகை மூட்டம், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருகிறார்கள். திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் கூட குப்பைக் கிடங்கில் பிடித்த தீயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

 

அரியமங்கலம் குப்பைக் கிடங்கை குப்பைக் கிடங்கு என்பதைவிட குப்பை மலை என சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். காரணம் திருச்சி நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே குப்பை கொட்ட தொடங்கியது மாநகராட்சியாக அந்தஸ்து உயர்ந்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திருச்சி நகரின் பல பகுதிகளிலும் நாளொன்றுக்கு சுமார் 400 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்பட்டதால் குப்பை மேடு குப்பை மலையாக மாறியது.

 

47 ஏக்கர் பரப்பளவில் சுமார் 25 மீட்டர் உயரத்தில் குவிந்துள்ள இந்த குப்பை மலையில் ஒவ்வொரு ஆண்டும் காற்று காலத்தில் தீ பிடிப்பதும் நாள் கணக்கில் அல்ல மாதக்கணக்கில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தீ பிடித்தபோது 2 மாதமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. வருணபகவானின் கருணையால் பெய்த மழையால்தான் தீ கட்டுக்குள் வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அரியமங்கலம் பகுதி மக்கள் குப்பைக் கிடங்கை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் என பல போராட்டங்களை நடத்தினார்கள். அதன் பின்னர் தான் மாநகராட்சி அதிகாரிகள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை நவீன முறையில் உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை அங்கு குப்பைகளை கொண்டு வந்து போடுவது நிறுத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதன் மூலம் அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

 

N2

அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து அவற்றை உலர வைத்து உரமாக்கும் திட்டத்தை ரூ.50 கோடியில் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. இந்த புதிய திட்டத்தின்படி ஒட்டுமொத்த குப்பைக் கிடங்கும் நாளடைவில் உரமாக மாற்றப்பட்ட பின்னர் அந்த இடத்தில் நவீன பூங்கா அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

 

இதற்காக கடந்த ஜனவரி மாதம் பூமி பூஜை போடப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த பணியை ரூ.50 கோடியில் நிறைவேற்றும் என்றும் அப்போது கூறப்பட்டது.

 

பூமி பூஜை போடப்பட்டதும் அந்த நிறுவனம் குப்பைக் கிடங்கில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து குப்பைகளை பிரித்தல், உலர வைத்தல் போன்ற பணிகளை செய்ய தொடங்கியது. திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 6 மாதங்கள் முழுமையாக முடிவடைந்தும் குப்பைகளை நவீன முறையில் உரமாக்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அந்த பணிகள் தொடங்கப்பட்டு இருந்தால் தற்போது இந்த குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ பிடித்து எரிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது.

 

அரியமங்கலம் குப்பை மேட்டை கரைத்து அதனை நவீன உரமாக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா? மக்களை அன்றாடம் வாட்டி வதைக்கும் குப்பைக் கிடங்கு தீ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன என்பது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

 

அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதில் எந்த வித ஐயப்பாட்டுக்கும் இடம் இல்லை. ரூ.50 கோடி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தை பெற்று உள்ள நிறுவனம் குப்பைகளை உலர வைத்தல் போன்ற பூர்வாங்க பணிகளை மட்டும்தான் தற்போது செய்து வருகிறது. குப்பைகளை நவீன முறையில் உரமாக மாற்றுவதற்குரிய எந்திரங்கள் தமிழகத்தில் மட்டும் இன்றி இந்திய அளவில் கூட இல்லை.

 

தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தான் அவை இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கான பணிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்த எந்திரங்கள் வந்து சேர்ந்ததும் பணி தீவிரமடையும்.

 

அந்த நிறுவனம் பணிகளை செய்வதற்கு வசதியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 7 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது திடீர் தீ பிடித்து விட்டதால் தீயை அணைக்கும் வரை அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தீ முழுமையாக அணைக்கப்பட்டதும் முழுவீச்சில் பணிகள் நடைபெறும். குறிப்பிட்ட காலத்திற்குள் அரியமங்கலம் குப்பைக் கிடங்கை நவீனப்படுத்தும் பணி செய்து முடிக்கப்படும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

N3

Leave A Reply

Your email address will not be published.