திருச்சி அருகே பஸ்ஸிற்காக சாலையில் மாணவர்கள்

0
Full Page

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கருமலை அருகே மாங்கனாபட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. 6-ம் வகுப்பிற்கு மாணவ, மாணவிகள் செல்ல வேண்டும் என்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூத்து கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும்.

ஏழ்மை நிலையில் வாழும் கூலித்தொழிலாளிகள் நிறைந்த கிராமம் என்பதால் பெரும்பாலானோரிடம் இரு சக்கர வாகனங்கள் கிடையாது. இதன் காரணமாக தங்கள் பிள்ளைகளை வாகனங்களில் அழைத்துச் செல்ல முடியாது. ஆகவே, மாணவ-மாணவிகளின் நலன்கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கிருந்து கண்ணூத்து வரை அரசு பஸ் இயக்கிட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Half page

இதனால், ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் மாங்கனாபட்டியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்களும் பங்கேற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார், வருவாய்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி போக்குவரத்து கழகத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மாணவ-மாணவிகள் பள்ளி சென்று திரும்பிடும் வகையில் காலை மற்றும் மாலையில் உரிய நேரத்தில் அரசு பஸ் இயக்கிட வேண்டும், மலை அடிவாரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். மின் மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில், உங்கள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாவிட்டால் தாசில்தார் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.