பயணிகள் தானாக பயணச் சலுகையை விட்டுக்கொடுத்தால் ரயில்வே மானியச் செலவு ‘’ஒரு சதவீதம்’’ குறையலாம்

தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப்பொதுச்செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
ஆண்டு ஒன்றுக்கு விரைவு ரயில்களில் சுமார் ரூ.16,000 கோடியும், சாதாரண பயணிகள் ரயில்களில் ரூ.12,000 கோடியும் இழப்பு ஏற்படுகிறது. பயணிகள் பிரிவில் ரயில்வேயின் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வகுப்பு மட்டும் லாபத்தில் இயங்கி வருகிறது. கட்டமைப்பு மூலதனங்களுக்கு ஏற்ற வருவாய் இல்லாதது,கூடிவரும் எரிபொருள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள், குறைவான பயணிகள் போன்ற பல காரணங்கள் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. மானியமாக ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி செலவிடுவதால் ரயில்வே நிதிநிலை மோசமடைந்துவருகிறது.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ரூ3,900 கோடி, தொழிலாளர்கள் நலன்களுக்குரூ.5,100 கோடி ரயில்வே செலவிடுகிறது. இதுமட்டுமின்றி, சென்னை, மும்பை புறநகர் ரயில்கள் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்கள் குறைந்த கட்டணத்தில் இயக்குவதால் ஏற்படும் ஆண்டு இழப்பு ரூ.5,200 கோடி. இந்த மானியம் பயணிகள் பிரிவு வருவாயில் ரூ.14.5 சதவீதம் இழப்பை ஏற்படுத்துகிறது.
பின்தங்கிய பகுதிகளில் 90 கிளைப்பாதைகள் உள்ளன. சமூக வளர்ச்சிக்காக இந்த பாதைகளில் ரயில் சேவை மேற்கொள்வதால் ஆண்டு இழப்பு ரூ1,900 கோடி. இதனால் பயணிகள் பிரிவில் ஏற்படும் வருவாய் இழப்பு ரூ.5.3 சதவீதம். சாலைகள் மேம்பட்டதை சுட்டிக்காட்டி 40 பாதைகளை மூட ரயில்வே சீர்திருத்த கமிட்டி-1983 பரிந்துரைத்ததை மாநில அரசுகள் ஏற்கவில்லை.
லக்கேஜ், பார்சல், கேட்டரிங், தபால்கள், ராணுவ பொருட்கள் கையாள்வதில் கட்டண குறைவு மற்றும் மானிய செலவு இழப்பு ஆண்டுக்கு ரூ.2,500 கோடி. இது பயணிகள் பிரிவில் 7.0 சதவீத இழப்பை உருவாக்குகிறது. மூங்கில், காகிதம் போன்ற சில குறிப்பிட்ட சரக்குகளுக்கான கடந்த நிதியாண்டு கட்டணச்சலுகை மட்டும் ரூ.412 கோடி. ரயில் கட்டணத்தில் 47 விழுக்காடு மானியம், 53 சதவீத கட்டணம். இதனால் பயணிகள் சலுகைகளை தானாக முன் வந்து கைவிட வேண்டும். பயணச்சீட்டு விற்பனையின் போது பயணிகள் சலுகைகள் கைவிடுவது தொடர்பாக விருப்பம் தர வேண்டும் என ரயில்வே வாரியம் 100 நாட்கள் செயல் திட்டத்தில் தெரிவித்து இருக்கிறது.

ஆண்டுக்கு மூத்த குடிமக்கள் ரூ.1,300 கோடி, உடல் ஊனமுற்றவர்கள் ரூ.120 கோடி, நேயாளிகள் ரூ.75 கோடி, விளையாட்டு மற்றும் யுத்த வீர்ர்களின் விதவைகள் ரூ.90 கோடி சலுகைகளாக பெருகிறார்கள். பயணிகள் பிரிவு வருவாயில் இது நான்கு சதவீதம் இழப்பை ஏற்படுத்துவதாக பிபேக் தேப்ராய் கமிட்டி சுட்டிக்காட்டி இருக்கிறது.
கடந்த 2018-19 நிதியாண்டு ஒட்டு மொத்த பயணிகள் பிரிவு வருவாய் ரூ.51,000 கோடி. ஆகஸ்ட் 15, 2016 முதல் மார்ச் 31, 2018 வரையிலான 19 மாதங்களில் 40 லட்சம் மூத்த குடிமக்கள் சலுகைகள் கைவிட்டதில் ரூ.77 கோடி மட்டுமே மிஞ்சியது. பயணிகள் தானாக முன் வந்து பயணச் சலுகைகள் விட்டுக் கொடுத்தால் மொத்த மானியச் செலவில் ஒரு சதவீதம் குறையலாம். இத்திட்டம் பெரிய அளவில் வருவாய் இழப்பை ஈடுசெய்யாது. மாறாக கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்து இருக்கிறது. எனவே, மறுபரிசீலனை தேவை.
