ஆதிமகள் 22

0
1

கரண் தன்னை நேசித்தாலும், நேசிக்காவிட்டாலும் அப்பாவின் முடிவே தன் முடிவு என அப்போது முடிவு செய்த காயத்ரி நிம்மதியாக தூங்கிப்போனாள்.

சண்முகநாதன் அதிகாலையிலே, வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டார். காயத்ரி தனது தோழி அகிலாவை சென்று பார்த்து வரலாம் என நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவளது வீட்டின் வாசலில் அகிலாவே வந்து நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த காலை நேரத்தில் இவ்வளவு சீக்கிரமாக ஒரு போன் கூட செய்யாமல் அகிலா திடீரென வந்தது காயத்ரிக்கு ஆச்சரியமாக இருந்தாலும், ஒருபுறம் உள்ளூர மகிழ்ச்சியடைந்தாள். அகிலாவின் முகம் வாடிப் போயிருந்ததை காயத்ரி கவனிக்க தவறவில்லை. அவள் ஏதோ ஒரு சிக்கலில் இருப்பது போல் காயத்ரியின் மனதில் பட்டது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “வா அகிலா, நானே உன்னை பார்க்க வரலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

2

ஆனா, நீயே என் எதிரில வந்து நிக்கிற, வா” என அகிலாவை வீட்டினுள்ளே அழைத்துச் சென்றவள், “அம்மா அகிலா வந்திருக்கா அவளுக்கும் சேத்து டிபன் கொடு” என அடுக்களையில் இருந்த அம்மாவை பார்த்து கூறினாள் காயத்ரி. அடுக்களையிலிருந்து வெளியே வந்த ஜானகி அம்மாள் அகிலாவை பார்த்து, “என்னடி கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்க. முகம் வேற வாடி போயிருக்கு, உடம்புக்கு ஏதும் சரியில்லையா, வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா” என மனதில் தோன்றிய அனைத்தையும் ஒரே மூச்சில் அகிலாவிடம் கேட்டு முடித்தாள். அகிலா, அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து, தன் முகத்தில் வலிய ஒரு புன்னகையை வரவழைத்தவளாய், “நல்லா இருக்கேம்மா” என கூறியபடி காயத்ரியின் அறையினுள் சென்று இருவரும் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டனர்.

கதவு சாத்தப்பட்டவுடன், அகிலா பெரும் தேம்பலுடன், காயத்ரியின் தோளில் சாய்ந்து, ஆக்ரோசத்துடன் அழ ஆரம்பித்தாள். சத்தம் வெளியே வராமல் தன் பற்களை இறுக்க கடித்தபடி, மனதின் பாரத்தை கண்ணீரால் கொட்டி தீர்த்துவிட, இதை விட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதைப் போல் உடல் குலுங்க அழுதாள். காயத்ரிக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப்போய் நின்றாள். “அகிலா அழாதே என்ன ஆச்சு, அழறதை நிறுத்து அகிலா” என காயத்ரி சமாதானம் சொல்லி பார்த்தவள். சரி முழுவதுமாய் அழுது முடிக்கட்டும் என தனது தோளில் இருந்து அவளை நிமிர்த்தி, அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தாள்.

கட்டிலில் அமர்ந்தவள் தனது இரு கைகளால் முகத்தை புதைத்துக் கொண்டு மேலும் அழுதாள். அழுகை சத்தம் நிச்சயமாக அறைக்கு வெளியே கேட்கவில்லை.

ஜானகி அம்மாள் கதவை தட்டினாள். “என்னடி இது கதவை தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு பேசறீங்க. சாப்பிட்டுவிட்டு போய் பேசுங்க” என்றாள்.

அம்மா கதவு தட்டும் சத்தம் கேட்டவுடன் அகிலா தனது முகத்திலிருந்த கையை எடுத்தவள், அங்கிருந்த வாஷ்பேசனில், தனது முகத்தை நன்றாக கழுவி, துண்டால் துடைத்துக் கொண்டாள்.

மழை கழுவிய மலர் போல் அவள் முகம் மாறிற்று.

“சரி வா சாப்பிட்டு வெளியே போய் பேசிக்கலாம்” என அகிலாவை காயத்ரி வெளியே அழைத்து வந்தாள்.

4

ஜானகி அம்மாளிடம் அகிலா முகம் கொடுத்து எதுவும் பேசவில்லை. காயத்ரியும், அகிலாவை அம்மா கவனித்து விடாமலிருக்க ஏதேதோ பேசி அம்மாவை அகிலாவிடமிருந்து திசை திருப்பிக் கொண்டிருந்தாள்.

ஜானகி அம்மாளுக்கு வீட்டுக்கு வரும் நபர்களையோ அல்லது அவளிடம் பேசும் நபர்களையோ கூர்ந்து கவனித்து அவர்களது ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அற்ப எண்ணமோ, ஆர்வமோ அவளுக்கு  எப்போதும் தோன்றியதில்லை. தான் இப்போது சமைத்துக் கொடுத்த உணவு எப்படி இருந்தது. அகிலாவும், காயத்ரியும் பசியாற சாப்பிட்டார்களா என்பதில் மட்டுமே அவளது கவனம் இருந்தது. ஜானகி அம்மாளிடம் இருந்து இருவரும் தப்பிப்பது ஒன்றும் ஒரு பெரிய காரியமே இல்லை. இது காயத்ரிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அம்மாவுக்கு எது தேவையோ அதை பேசிவிட்டு, இருவரும், வெளியே சென்றுவருவதாக கூறி காயத்ரியும், அகிலாவும் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

காயத்ரியின் ஸ்கூட்டியில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஊருக்கு வெளியே வெகுதூரம் போனவர்கள் வழியில் இருந்த ஒரு பள்ளிக்கூட மைதானத்தின் மரநிழலில் ஒதுங்கினார்கள்.

பள்ளிக்கூடத்தில் கேட் ஏதும் இன்றி காம்ப்பௌண்ட் சுவர் மட்டுமே இருந்தது. அன்று பள்ளி விடுமுறைநாள் என்பதால், மைதானத்தில் மட்டும் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். வெயில் ஒன்றும் அவ்வளவு கடுமையாக இல்லாமல், வானம் சிறிது மேகமூட்டத்துடன் இருந்ததால் ரம்மியமாகவே இருந்தது.

காயத்ரிக்கு அகிலா ஒருமுறை அவளது அக்காவின் குடும்பம் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால் அகிலா அப்போது என்ன சொன்னாள் என்று யோசித்து பார்த்தாள் காயத்ரி, அவளுக்கு முற்றிலும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை.

அகிலாவின் அக்கா திருமணத்திற்கு, தான் போய் வந்தது, மாப்பிள்ளை அழைப்பிற்காக கும்பகோணத்திற்கு தானும் அகிலாவுடன் சென்று வந்ததை தவிர வேறு எதுவும் காயத்ரியின் நினைவுக்கு வரவில்லை. ஆனால் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு அகிலா தனது அக்காவை பார்க்க கும்பகோணம் சென்று வந்ததை பற்றி அகிலா ஏதோ சிரத்தை எடுத்து தன்னிடம் கூறிய போதும் அதை தான் சரியாக கவனிக்காமல் கேட்டது காயத்ரிக்கு நினைவுக்கு வர, “உன் அக்கா எப்படிப் இருக்காங்க” என காயத்ரி அகிலாவை பார்த்து கேட்டாள்”

“அவளுக்கென்ன அவ நல்லாத்தான் இருக்கா” என காயத்ரியின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கமாக திரும்பி பதில் பேசினாள் அகிலா.

அவர்கள் நின்றிருந்த மர நிழலின் கீழே தரையில் உட்கார மனமில்லாமல், சற்று தூரம் தள்ளி வேறொரு மரத்தின் கீழிருந்து ஓர் உடைந்து போன சிமெண்ட் பெஞ்ச்சின் மீது உட்கார இருவரும் நடந்து சென்றனர். அப்போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எறிந்த பந்து அகிலாவின் முதுகில் பட்டு கீழே விழுந்தது. திடீரென விழுந்த அடியால் அகிலா நிலை தடுமாறினாள். கீழே விழுந்து கிடந்த பந்தை எடுத்து காயத்ரி மைதானத்தை நோக்கி வீசி எறிந்தாள். அது அவள் எறிந்த இலக்கை அடையாமல் பாதியிலே கீழே விழுந்தது.

அவர்கள் உட்காரச் சென்ற சிமெண்ட் பெஞ்ச்சின் மீது மஞ்சள் நிற பூக்கள்  சிதறிக் கிடந்தது. அப்போதுதான் அந்த பூக்கள் உதிர்ந்திருக்க வேண்டும். வாடாமல் பெஞ்ச்சின் மீது கிடந்த பூக்களை ஒவ்வென்றாக எடுத்து தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள் காயத்ரி. பெஞ்ச்சில் இருவரும் உட்கார்ந்தனர். அவர்கள் பின்னால் இருந்த கருத்து பெருத்த மரங்கள் இரண்டு ஏதோ அவர்களின் காவலுக்கு நிற்பது போல் காயத்ரிக்கு தோன்றியது.

 

3

Leave A Reply

Your email address will not be published.