திருச்சியில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

0

திருச்சியில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் பெண் விடுதலை நூல் வெளியீட்டு விழா

தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித்தோழர்கள் கூட்டமைப்பு சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா நேற்று (ஜுலை7) மாலை 5.30மணியளவில் என்.எஸ்.கலைவாணவர் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பணித் தோழர்கள் கூட்டமைப்பு தலைவர் பேரா.கோ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் பேரா.இரா.செந்தாமரை, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மா.செண்பகவள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளி முதல்வர்  வனிதா, பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி, பெரியார் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ப.விஜயலட்சுமி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, மருத்துவ அலுவலர் மஞ்சுளா வாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தலைவர்

இவ்விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து பேசுகையில்,

அன்னை மணியம்மை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவ்வாண்டு முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகள் மணியம்மையாரை உள்வாங்கி பேசுவதன் மூலம் இன்னும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. தந்தை பெரியார் பெண் விடுதலையைப் பற்றி அதிகம் பேசியிருக்கிறார்.  உலகில் சரிபாதி பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் ஆண்களுக்கு மேன்மையை தரும். எனவே பெண்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும்.

தந்தை பெரியார் சமுதாயத்திலுள்ள மேடு, பள்ளங்களை சமப்படுத்தியதோடு பெண் கல்விக்காகவும் அயராது பாடுபட்டார் என்று பேசினார்.

முன்னதாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நெருக்கடி நிலை காலத்திலும் கூட ஏழை குழந்தைகளுக்கு கல்வி புகட்ட வேண்டுமென பெருமுயற்சி செய்தவர் மணியம்மையார். நெருக்கடி நிலை காலத்தில் திராவிடர் கழகத்தை மிக திறமையாக வழிநடத்தியவர் அம்மா.. அம்மா துணிவாக செயல்பட்டார். அய்யாவை மிகவும் கவனமாக பாதுகாத்தார். உணவு விசயத்திலிருந்து உடல் நலம் வரை அவர் அக்கறை எடுத்துக் கொண்டார். அதனால்தான் பெரியார் அவர்கள் நீண்ட காலம் சமுதாயத்திற்காக உழைக்க முடிந்தது என்று பேசினார்.

food

நூல் வெளியீடு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் ஆர்.டி.சபாபதி மோகன் தந்தை பெரியாரின் அறிவுக்கருவூலமான பெண் விடுதலை நூலின் முதல் படியை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என். நேரு பெற்றுக்கொண்டார்.

கே.என்.நேரு

நூலினை பெற்றுக் கொண்டு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பெரியார் மணியம்மையாரை திருமணம் செய்யவில்லை என்றால், தமிழ்நாட்டில் அண்ணா அவர்கள் தி.மு.க என்ற இயக்கத்தை தொடங்கி இருக்க மாட்டார். திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. தனக்காக அல்லாமல், மற்றவர்களுக்காக குரல் கொடுத்தவர் பெரியார். நேர்மை, நேர்மை என்று உரத்து பேசுபவர்கள் நேர்மையாக இருப்பதில்லை என்று அவர் பேசினார்.

சபாபதி மோகன்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் ஆர்.டி.சபாபதி மோகன் பேசுகையில், பெரியார் பேச்சுகள் அவர் தொடர்புடைய நிகழ்வுகள், போராட்டங்கள், மணியம்மையாரின் போராட்ட குணம்

உள்ளிட்டவற்றை பெரியாருடன் ஒப்பிட்டு 336 தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த நூல் பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்றாகும். இந்நூலை படித்துவிட்ட எவரும் உலகில் பெண்ணியம் குறித்து சிறப்பாக பேச முடியும் என்றார்.

பரிசளிப்பு

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மையம் நடத்திய அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி தமிழர் தலைவர் பாராட்டினார். நிறைவாக பணித்தோழர்கள் கூட்டமைப்பு செயலாளர் கவுதமன் நன்றி கூறினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.