திருச்சியில் ஈஷா சார்பில் மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி

0
gif 1

ஈஷா சார்பில் மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி

ஈஷா வேளாண் காடுகள் திட்டம் சார்பில் துறையூர் அருகே மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி ஜூலை 7 மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 800க்கும்மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி துறையூர் தாலுகாவில் காஞ்சேரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 150 ஏக்கர் பரப்பிலான ‘லிட்டில் ஊட்டி’ என்ற வேளாண் காட்டில் நடைபெற்றது.

gif 3

நிகழ்ச்சியில்ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

“சிலஃபோட்டோ சென்ஸிட்டிவ் பயிர்கள் முன்கூட்டியே பனி விழுவதால் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே கதிர்விட்டு விடுகின்றன. இன்று மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் ஒற்றைப்பயிர் விவசாயத்தை வெகுவாகப்பாதிப்பதால் மரப்பயிர் விவசாயமும், மரங்களுக்கு இடையே ஊடு பயிராக பல பயிர் விவசாயமும் கடைபிடிக்கப்படவேண்டியது அவசியம்.

இதனை நன்குஉணர்ந்ததால் தான் 2004ல் சத்குருவின் வழிகாட்டுதலில் துவங்கப்பட்ட ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் வேளாண் காடுகள் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. மேலும், அவர் சில முன்னோடி வேளாண்காடுகள் வளர்ப்பு விவசாயிகளின் அனுபவப் பகிர்வுகளை காணொளி காட்சியாக வழங்கினார்” என்றார்.

இதை தொடர்ந்து ’லிட்டில் ஊட்டி’ வேளாண் காட்டின் உரிமையாளர் டாக்டர்.துரைசாமி தன்னுடைய வேளாண் காடு வளர்ப்பின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“பூமித்தாயை காப்பாற்ற வேண்டுமென்றால் மரம் நட வேண்டும்.புவி வெப்பமயமாவதைத் தடுப்பதற்கு மரம் நடுவதே ஒரே வழி! இதற்குநாம் ஆளுக்கு 2 மரம் நட்டாலே போதும்.” என்றார்.

gif 4

மேலும், மரம்நடுவதில்உள்ளநுட்பங்கள்குறித்துவிளக்கமாகப்பேசியஅவர், வேளாண் காடுகள் உருவாக்கத்தினால் சுற்றுச்சூழல் மேம்படுவது மட்டுமில்லாமல், விவசாயிகளின் வருமானமும் வெகுவாக அதிகரிப்பதை உறுதிசெய்ய முடியும் என்றார்.

மனிதன் நடக்க பழகியதும், ஊஞ்சல்ஆடியதும், படுத்துதூங்கியதும், வீடுகட்டியதும், கடைசியில் உடலை எரிப்பதும் மரத்தினால் மட்டுமே நிகழ்கிறது என்பதை அவர் குறிப்பிட்டு மரம்வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். தனது இந்த லிட்டில் ஊட்டி என்ற பசுமை மிகு வேளாண்காடு, ஈஷா விவசாய இயக்க குழுவினரின் சிறப்பான வழிகாட்டுதலினால் மட்டுமே சாத்தியமானது என்பதைக் கூறி, ஈஷாவிற்கு நன்றி தெரிவித்தார்..

இந்தக் கருத்தரங்கில் முன்னோடி மரப் பயிர் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.  கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், ”மரங்களுக்கு இடையே விவசாயம் செய்தல் மற்றும் வரப்பு ஓரங்களில் மரம் நடுதல்” குறித்தும்,  பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி வள்ளுவன் “தென்னை மரங்களுக்கு இடையே டிம்பர் மரங்கள் வளர்த்தல்” குறித்தும் பேசினார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ராஜாக்கண்ணு “தென்னை மற்றும் டிம்பர் மரங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்தல்” குறித்தும், திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயி ஆர்.பி.கணேசன்

“சந்தன மரம் மற்றும் செம்மரம் வளர்த்தல்” குறித்தும் பேசினார்.

உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில், அனைத்து விவசாயிகளும் வேளாண் காடுகள் உருவாக்கத்தில் தங்களுக்கு உள்ள சந்தேகங்கள் குறித்து முன்னோடி விவசாயிகளிடம் நேரடியாககேட்டறிந்தனர்.

அதன்பின் விவசாயிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்துவேளாண் காட்டினை பார்வையிட்டனர் . ஒவ்வொரு குழுவிலும் ஈஷா வேளாண் காடு திட்டத்தின் வல்லுனர்கள் உடனிருந்து விவசாயிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை அளித்தனர்.

இதற்கு முன்பு, கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே வேளாண் காட்டில் இதேபோன்றதொரு ஒரு பயிற்சி நடைபெற்றது. அதில் சுமார் 700 விவசாயிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 2018 டிசம்பரில் நடந்த பயிற்சியில் 500 விவசாயிகள் பங்கேற்றனர்.

மரப் பயிர் சாகுபடி மூலம் தமிழக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை ஈஷா வேளாண் காடுகள் திட்டம் செய்து வருகிறது. குறைந்தப்பட்சம், 1 ஏக்கருக்கு மேல் மரம் நட விரும்பும் விவசாயிகளுக்கு அவர்களின் நிலத்துக்கே நேரடியாக சென்று ஆய்வு செய்து இலவச ஆலோசனை வழங்கி வருகிறது. 2004-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 70,000 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தற்போது 1,500 விவசாயிகளை மாதிரி விவசாயிகளாக  மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.