திருச்சி மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் !

0
1 full

திருச்சி மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் !

 

4 கோட்டங்களிலும் குறைதீர் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், திருச்சி மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

 

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். எஸ்.சி, எஸ்.டி இனமக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், மாநகராட்சியில் பணிபுரியும் எஸ்.சி, எஸ்.டி ஊழியர்களுக்கான திட்டங்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் அவர் ஆய்வு நடத்தினார்.

 

2 full

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகர பொறியாளர் அமுதவல்லி, நகர் நல அலுவலர் ஜெகநாதன், உதவி ஆணையர்கள் தயாநிதி, வைத்தியநாதன், பிரபாகரன், திருஞானம் மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை ஆகிய 4 கோட்டங்களையும் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு ஆணைய துணைத்தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். மேலும் மாநகராட்சி அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 

தொடர்ந்து ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

 

திருச்சி மாநகராட்சியில் துப்புரவுப்பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களில் 722 பேர் ‘அவுட் சோர்சிங்’ முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊதியத்தை வங்கியில் ஆன்லைன் முறையில் செலுத்தவும், இ.எஸ்.ஐ, தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம் உள்ளிட்டவை அமல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளேன். மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.

 

அவற்றை பூர்த்தி செய்யும்போது எஸ்.சி., எஸ்.டி. இன மக்களுக்கு உரிய முன்னுரிமையும், இனசுழற்சி முறையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த 2014-ம் ஆண்டு கழிப்பறை, சாக்கடை குழியில் இறங்கும் பணியில் இருந்த 84 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டு, மாற்றுப் பணிக்கு தாட்கோ மூலம் உதவி வழங்கப்பட்டது. இதேபோல 17 பேர் எங்கு சென்றனர் என தெரியாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து மறுவாழ்வு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

4 கோட்டங்களிலும் எஸ்.சி, எஸ்.டி குறைதீர்க்கும் பிரிவு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் குறைவாகவே உள்ளன. நாடு முழுவதும் ஜூன் 25-ந் தேதி தொடங்கி இம்மாதம் (ஜூலை) 27-ந் தேதி வரை எஸ்.சி, எஸ்.டி மக்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இவற்றில், 300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.