திருச்சியில் டி.ஜி.பி. பேச்சு

0
Business trichy

காவல்துறையில் புதிதாக பணிக்கு தேர்வானவர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி வளாகத்தில் சட்டக்கல்வி, துப்பாக்கிகளை கையாளுதல், கவாத்து பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 7 மாத கால பயிற்சி முடித்த 234 காவலர்களின் பயிற்சி நிறைவு விழா தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு, பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பயிற்சியில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கும், போதகர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி அவர் பேசியதாவது:-

லட்சக்கணக்கான இளைஞர்கள் காவல்துறையில் பணிக்கு சேர வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. உங்களது கல்வித்தகுதி, உடல்தகுதி போன்றவற்றின் அடிப்படையில் காவல்துறை குடும்பத்தில் இணைந்துள்ளார்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் பயிற்சி என்பது முக்கியம். முறையான பயிற்சி இருந்தால் விமானத்தை ஓட்டலாம். விண்வெளிக்கு கூட செல்லலாம்.

Half page

தற்போது நீங்கள் கற்றுக்கொண்டது அடிப்படை பயிற்சி தான். ஆகவே தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும். தமிழக காவல்துறையில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். நீங்கள் செய்கிற எந்த ஒரு காரியமும் பொதுமக்களால் உற்று கவனிக்கப்படும். ஆகவே காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து பயிற்சி காவலர்கள் நெருப்பு வளையத்துக்குள் தாவுதல், கராத்தே, சிலம்பம், பிரமிடு வடிவில் நின்று பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர். இதில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் உமையாள், துணை முதல்வர் முரளிதரன், பயிற்றுனர்கள் மோகனசுந்தரி, ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பயிற்சி முடித்த காவலர்கள் போலீஸ் நிலையங்களில் ஒருமாத காலம் நேரடி பயிற்சி பெற உள்ளனர்.

முன்னதாக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவை பார்வையிட்டார். அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Full Page

Leave A Reply

Your email address will not be published.