தினகரன் யார் ? முழு அரசியல் மறுபக்கம்

0
Business trichy

தமிழகத்தின் புதியதோர் அரசியல் ஆளுமை என்று வர்ணிக்கப்பட்டுக் கொண்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது சாவல்களின் முற்றுகையில் உள்ளார். இந்தச் சவால்களைத் தகர்த்து அரசியல் களத்தில் நிலைபெறுவாரா என்கிற அவரின் அரசியல் மறுபக்கத்தையே இக்கட்டுரை ஆராய்கின்றது.

 

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என்று பிரிந்திருந்த இரு அணிகள் ஒன்று சேர்ந்தன. சசிகலா சிறை சென்ற நிலையில், அதிமுகவைக் கைப்பற்றுவதே நோக்கம் என்று புறப்பட்டவர் தான் டிடிவி தினகரன். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தினகரன் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.

 

இதனைத் தொடர்ந்து, தங்கத்தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அடுத்து பழனியப்பன் என அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. தினகரன் இனி அரசியலில் தாக்கு பிடிப்பாரா? அவருக்கான சவால்கள் என்ன? அந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

சவால் – 1: அதிமுகவைக் கைப்பற்றுவதே நம் இலட்சியம் என்று தொண்டர்களை அணி திரட்டி சென்ற தினகரன், நடுவழியில் அதிமுகவைக் கைப்பற்றுவது நோக்கமல்ல. இரட்டை இலை எங்களுக்குத் தேவையும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி இன்னும் பதிவு செய்யாமல் புதிய நிர்வாகிகளை நியமிக்காமலும் இருக்கிறார்.

சவால் – 2: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனக் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டவுடன் தினகரனுக்குப் பக்கப் பலமாகத் தன் சொற்பொழிவுகளால் மேடைகளில் வலம் வந்த நாஞ்சில் சம்பத் கட்சியிலிருந்து விலகினார். கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லை என்று கூறினார். கட்சிக்குப் பெயரைத் தினகரன் எல்லாருடனும் கலந்துரையாடி வைக்கவில்லை என்று தெரிகிறது. சர்வாதிகாரத் தன்மையை ஏன் வெளிப்படுத்தினார்? நாஞ்சில் சம்பத் போன்றவர்களைத் தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பது தினகரன் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றதா?

 

சவால் – 3: தினகரன் அணி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தங்கத்தமிழ்ச்செல்வன் தினகரனோடு முரண்பட்டுக் கொண்டிருந்தபோதும் அந்த முரண்பாடுகளைத் தினகரன் ஏன் களைய முற்படவில்லை? (எ-டு) 18 தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டபோது மேல்முறையீடு செய்யவேண்டும் என்பதில் தங்கத் தமிழ்ச்செல்வனோடு முரண்பாடு. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதில் முரண்பாடு. மக்களவை தேர்தலில் போட்டி வேண்டாம், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மட்டுமே போட்டியிட வேண்டும் முரண்பாடு.

 

சவால் – 4: மக்களவைத் தேர்தலில் திருச்சி, தேனி என இருத்தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு என்று ஊடகக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில் 40 மக்களவையில் போட்டியிட்டது ஏன்? சசிகலாவைத் தினகரன் சந்தித்தபோது படுதோல்வி குறித்துச் சசிகலா கண்டித்துள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தினகரன் ஏன் தேர்தலில் விவேகமாக நடந்து கொள்ளாமல் தானே முடிவெடுத்தார்?

 

Full Page

சவால் – 5: தினகரனின் நம்பிக்கைக்குரிய கரூர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தபோது தினகரன் அந்த விலகலைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். ஆராயவில்லை. இதன் தொடர்ச்சியாகத் தங்கத்தமிழ்ச்செல்வன் விலகலும் நடந்திருக்கின்றது. ‘நம்ம திருச்சி” செய்தி வார இதழ் 3 மாதத்திற்கு முன்பே தங்கத்தமிழ்ச் செல்வனோடு திமுகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கத்தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவார் என்று எழுதியிருந்ததை ஏன் அலட்சியப்படுத்தினார்?

 

சவால் – 6: திமுக – அதிமுக என்னும் இருபெரும் இயக்கங்களை எதிர்த்து வெல்லமுடியும் என்பதைத் தினகரனின் துணிச்சலாகப் பார்க்கமுடியுமே தவிர விவேகமாகப் பார்க்கமுடியாது. அதிமுகவை அழிப்பது என்று தினகரன் முடிவெடுத்திருந்தால் திமுகவோடு நடந்து முடிந்த தேர்தலில் கூட்டணி வைத்திருக்கவேண்டும். அதைவிடுத்து ஆர்.கே. நகர் வெற்றிபோல அனைத்திலும் வெற்றிபெறுவோம் என்று அரசியல் களத்தில் பெரிய சறுக்கலைச் சந்தித்து ஏன்?

 

சவால் – 7: ஆகஸ்ட் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தேர்தல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. சென்னையில் புறநகர் பகுதியான ஆவடியை மாநகராட்சியாக அதிமுக அரசு தரம் உயர்த்தியுள்ளது. புதிய மாநகராட்சியின் தொகுதிகள் பிரிப்பது, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பதைக் காரணம் காட்டித் தேர்தலைத் தள்ளிப் போடமுடியும்? தேர்தல்கள் இல்லாமல் 2021ஆம் ஆண்டு மே மாதம் வரை கட்சியைப் பிரச்சனைகள் இல்லாமல் வழிநடத்துவது முடியுமா?

 

சவால் – 8: நடந்து முடிந்த தேர்தல்களில் 5% வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இதனை 10%ஆக உயர்த்துவதற்கே கடினமான உழைக்கவேண்டும். குறிப்பாக மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுக்கவேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டு, தஞ்சையில் மீத்தேன் எடுக்க உத்தரவு, காவிரியில் நீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகம் நீர் திறக்க மறுப்பது, கல்விக் கொள்கை 2019, ஒரே தேசம் ஒரே தேர்தல் போன்ற மாநில, மத்திய அரசுகளின் பிரச்சனையில் அமமுக கருத்துகளை அறிக்கையின் மூலம் தெரிவிக்கின்றது. அதற்கான களப் போராட்டங்களை ஏன் அறிவிக்கவில்லை.

 

சவால் – 9: அமமுக என்ற கட்சியின் கொள்கை நோக்கம் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஜெயலலிதாவையும், சிறையிலிருக்கும் சசிகலாவையும் முன்னிறுத்தித் தினகரன் இனியும் அரசியல் செய்யமுடியுமா? இவரின் அரசியல் முதல்தலைமுறை இளைஞர்களை எங்ஙனம் ஈர்க்கும்? இது குறித்துத் தினகரன் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.

 

சவால் – 10: தினகரனை அரசியல் ஆளுமையாக ஏற்றவர்களில் பலரும் வைத்துக் குற்றச்சாட்டு அவரின் பக்தி தொடர்பானது. தினகரனின் தனிப்பட்ட பக்தியை யாரும் குறைசொல்லவில்லை. ஒரு இயக்கத்தின் தலைவர் நிலைக்கு உயர்ந்த பின்னரும் ஒவ்வொரு நாளும் கோ பூஜை செய்வதும், ‘சிவாய நமக’ என்று 1,008 முறை கூறுவதும் முறையில்லை. தலைவர் நிலையில் இருப்பவர்கள் மதச்சார்பின்மையோடு இருக்கவேண்டும். தினகரனிடம் பிஜேபி கட்சியினர் அளவுக்குக் கடவுள் நம்பிக்கையும் மதச்சார்பும் இருப்பது அவரை தலைவர் நிலைக்குக் கொண்டு செல்லாது என்பதை அவர் ஏன் உணர மறுக்கிறார்? என்பது புலப்படவில்லை.

எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்து கடந்து சென்ற தினகரன் இனியும் அப்படிச் செல்ல முடியாது. அரசியல் களத்தில் திடீர் ஏற்றங்கள் இருக்கும் அதுபோலவே பரமபத விளையாட்டில் பாம்பு கடித்து, தொடங்கிய இடத்திற்கு வரும் நிலையும் இருக்கும். தினகரன் உண்மையில் ஆளுமை மிக்கவர் என்றால் அதனை வெளிப்படுத்தும் காலம் நெருங்கிவிட்டது. இன்னும் காலம் இருக்கிறது என்று தினகரன் கண்ணை மூடி கொண்டிருந்தாலும் அவருடைய இந்த அரசியல் வாழ்வின் மறுபக்கத்தை ஆராய மறுத்துவிட்டாலும், அரசியல் களம் அவரை விட்டு வெகுதொலைவில் சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.

 

– ஆசைத்தம்பி

Half page

Leave A Reply

Your email address will not be published.