நீட் கோச்சிங் வருமானம் 12 ஆயிரம் கோடியா?

0
Full Page

தமிழகத்தில் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான நீட் தேர்வு விலக்கு குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்.பி.க்கள் பேசினர்.

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜூன் 24 குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதம் நடைபெற்றது. திமுகவின் சார்பாக விவாதத்தில் பேசிய மக்களவைக் குழுவின் திமுக தலைவர் டி.ஆர்.பாலு, “2014ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக அரசு பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. ஆனால் அவையனைத்தையும் முழுவதுமாக நிறைவேற்றவில்லை. தற்போது எதிர்காலத்திற்கான வாக்குறுதிகளையும் வாரி வழங்கியுள்ளது.

நீட் தேர்வு குறித்து பேசியவர், “தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்படி பிளஸ் டூ தேர்வு நடைபெறுகிறது. ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியே நீட் தேர்வு நடைபெறுகிறது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறும் மாணவனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடைபெறும் நீட் தேர்வில் எவ்வாறு வெற்றிபெற முடியும்? நீட் தேர்வால் கடந்த 2-3 வருடங்களில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் 7,04,335 என்ற அளவில் உள்ளது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 63,749 மட்டுமே. பட்டியல் இனத்தவர், 20,009 பேர். பழங்குடியினர் 8,455 பேர் என்ற அளவில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Half page

இதன்மூலம் முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமே அதிகளவில் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கும் என்பது தெரியவருகிறது. சாதாரண மக்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைப்பது மறுக்கப்படுகிறது. இதனால்தான் நீட் தேர்வை தமிழக மக்கள் எதிர்க்கிறோம். 2007ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலம் கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் பயின்றனர். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டுமென இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 29 மாதங்களாகியும் இதுவரை அதற்கு மத்திய அரசு எந்த பதிலும் சொல்லவில்லை.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் தமிழகத்தில் அனிதா, பிரதீபா, இந்துஸ்ரீ, வைசியா, மோனிஷா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். முன்னேறிய நாடான இங்கிலாந்தில் கூட மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனவே நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

மாநிலங்களவையில் நீட் விவகாரம் தொடர்பாக பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, “நீட் தேர்வு கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களிடத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் 6 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். அந்த 6 லட்சம் மாணவர்களும் நீட் கோச்சிங் சென்டருக்கு சென்று படித்தே தேர்ச்சியடைந்துள்ளனர். அதற்காக ஒவ்வொரு மாணவரும் தலா ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் சுமார் 12 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளன. பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று பயில முடியாததால் தோல்வியடைந்தனர். நீட் தேர்வின் காரணமாக தமிழகத்தில் மட்டும் 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என்று கூறினார்.
நீட் தேர்வு என்பது தரமான மருத்துவர்கள் உருவாவதை உறுதிப்படுத்தாது எனவும், உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் பலரும் நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வையும் எழுதி மருத்துவராகவில்லை என்றும் சுட்டிக்காட்டிய சிவா,

“மாணவர்களின் சூழ்நிலைகளையும் அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இரண்டு வருடங்களாகியும் அந்த தீர்மானம் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை. தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. எனவே அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து குடியரசுத் தலைவருக்கு உடனடியாக தீர்மானத்தை அனுப்பிவைத்து தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விடிவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.