நந்தி தேவர்(சித்தர்கள் வரலாறு -2)

0
Full Page

ஆதிகுரு தட்சிணாமூர்த்தியாகிய பரம்பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர், அவர்களில் நந்திகள் நால்வர் என்று திருமூலர் திருமந்திரம் 109-வது பாடலில் குறிப்பிடுகிறார். அந்த நால்வர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்போராவர். இந்த நந்திகள் நால்வரும் சிவனாரிடம் முதன்முதலில் மிக உயர்ந்ததான மோனதீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்ல. திருக்கயிலாயப் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் என்பது அவர் கைலையில் சிவனாருக்கு நிரந்தரமானவாயில் காப்பவனாகவும் வாகனமாகவும் இருந்து வருவதிலிருந்து தெரிகிறது.

நந்திதேவரின் தோற்றம்

மிகப் பழங்காலத்தில் இப்போதுள்ள தஞ்சை மாநகரை அடுத்துள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவயோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாருட்சனை என்ற சித்திரவதியும் நல்லறமாம் இல்லறம் நடத்தி வந்தனர். நீண்டகாலமாக அவர்களுக்கு மகப்பேறு கிட்டவில்லை. ஒருநாள் சப்தரிஷிகளும் அவருடைய ஆஸ்ரமத்திற்கு வந்தனர். சிலாத முனிவர் அவர்களை தம் வீட்டில் உணவருந்திச் செல்லும்படி வேண்டினார். அந்த ரிஷிகள் எழுவரும் ‘பிள்ளையில்லாத வீட்டில் உணவருந்தமாட்டோம்’ என்று கூறிச் சென்றுவிட்டனர். அதனால் சிலாதர் திருவையாறு திருத்தலத்தில் உள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி பஞ்சாட்சர தவம் செய்து வந்தார். அவரது தவத்திற்கிரங்கிய சிவபெருமான் அவர்முன் தோன்றி, ‘சிலாதரே’ விரைவில் உமக்கு கருவில் இருந்து பிறவாத திருமகன் ஒருவன் கிடைப்பான். மரணமில்லாத அத்திருமகன் எனக்குச் சமமானவன். என்னை தரிசிப்பவர்கள் யாவரும் அவனையும் வழிபடுவார்கள் என்று கூறி மறைந்தார்.

அக்காலமுறைப்படி ஒரு சமயம் சிலாதர் யாகம் செய்ய பூமியை தோண்டியபோது பூமிக்கு அடியிலிருந்து நவரத்தினம் பதித்த தங்கப்பெட்டி ஒன்று கிடைத்த்து. பெட்டியைத் திறந்ததும். அதில் சிலாதர் பேரொளிமயமாக மான் மழுவேந்தி மதி சூடியிருந்த முக்கண்ணன் திருவுருவையே கண்டார். அப்போது அசரீரி ஒன்று ‘பெட்டியை மூடித்திற’ என்று கூற அவரும் அவ்வாறே பெட்டியை மூடித்திறந்து பார்த்தார். அதனுள் அருள் ஒளி நிறைந்த ஆண் குழந்தை ஒன்று இருக்கக் கண்டார். நந்தி ஒன்று பெயர் சூட்டி அக்குழந்தையை வளர்த்து வந்தார்.

குழந்தைக்கு வயது ஏழானபோது சிலாதர் ஆஸ்ரமத்திற்கு வருகைதந்த மித்ரர், வருணர் ஆகிய இரு தேவர்களும் சிலாத முனிவரிடம் “முனிவரே உங்கள் மகனுக்கு ஆயுட் காலம் எட்டு ஆண்டுகள்தான்’ என்று கூறி மறைந்தனர். அதைக் கெட்ட நந்தி சிலாதரைப் பார்த்து “தந்தையே நீங்கள் கவலைப்படாதீர்கள். கால காலனான சர்வேஸ்வரன் திருவருளால் நான் நீண்டகாலம் வாழ்ந்திருப்பேன் எனக்கு தவம்புரிய அனுமதி கொடுங்கள்” என்று கேட்டு தந்தையின் வாழ்த்தைப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வு வாழ கடுந்தவம் இயற்றத் தொடங்கினான்.

Half page

நந்திதேவர் சூரிய புஷ்கரணியில் கழுத்தளவு ஆழத்தில் நின்று கொண்டு கைகள் இரண்டையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்ட வண்ணம் ஒருமுறைக்கு ஒரு கோடி ஜபம் வீதம் எட்டுகோடி ஜபம் செய்து முடித்து அழிவில்லாத வாழ்நாளைப் பெற்றதுடன் கயிலையிலேயே சிவத்தொண்டு செய்யும் காவலனாக எந்நாளும் இருக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

எப்போதும் சிவசிந்தனையிலேயே இருக்கும் நந்தி தேவருக்கு சிவனாரே பூமிக்கு வந்து பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார். திருச்சிக்கு அருகில் உள்ள திருமழபாடியில் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் வசிஷ்டரின் பேத்தியாகிய சுயசையை மணமகளாகத் தேர்ந்து நந்திக்கும் சுயசைக்கும் திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோவிலில் தேவர்களும் முனிவர்களும் வாழ்த்துரை வழங்க திருமணம் முடித்து வைத்தார். அதுமுதல் இன்று வரை சிவபக்தர்கள் யாவரும் தன்னை வழிபட்டு தன் அனுமதி பெற்றே சிவதரிசனம் செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வண்ணம் எல்லா சிவன் கோவில்களிலும் சிவன் சன்னதிக்குப் புறத்தே இருந்து அருளாட்சி செய்து வருகிறார். இவர் எப்போதும் சிவ சிந்தனையில் சிவத்துடனேயே இருந்து வருவதால் இவரைத்தான் திருமூலர் சிவயோக மாமுனி என்று குறிப்பிட்டிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்றளவும் சிவபக்தர்கள் சிவபெருமானை வழிபட நந்திதேவர் துதி செய்யும் முறை

வந்திரை அடியில் தாழும் வானவர் மகுட கோடி

பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப்படையால்தாக்கி

அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்

நந்தியெம்பெருமான்பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்.

-திருவிளையாடல் புராணம்

(மனதில் சொல்லுதல்! சதா சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கும் நந்திகேசுவரரே! அம்மையப்பரைக் கண்டு வணங்க விடை தந்தருள்க)

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.