தமிழகம்: 3,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

இந்தியாவில் வறுமையாலும் கல்வியின்மையாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவல நிலை நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது. சமூக ரீதியில் மிகவும் பின்தங்கிய குழந்தைகள் குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி வேலைக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்த குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு தரப்பிலிருந்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காகக் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1986 அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் 14 வயதுக்குக் குறைவான குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் அரசு சார்பாக மீட்கப்பட்டும், அவர்கள் ஆதரவற்றவர்களாக இருந்தால் அவர்களுக்கு வாழ்க்கை வழங்கப்பட்டும் வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 66,169 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வாறாக 1,44,783 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2018-19ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் 22,114 குழந்தை தொழிலாளர்களை அரசு மீட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2018-19ஆம் ஆண்டில் 3,021 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2016-17ஆம் ஆண்டில் 2,850 குழந்தைகளும், 2017-18ஆம் ஆண்டில் 2,855 குழந்தைகளும் தமிழகத்தில் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 8,726 ஆகும்.

இந்த விவரங்களை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார், ஜூன் 24ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது வெளியிட்டார்.
