காக்க வைப்பதில் சுகம் காண்பவரா நீங்கள்?

0
Business trichy

காலந்தவறாமை (punctuality) பற்றி பேசியபோதே, இதுவும் தோன்றியது. சொன்ன நேரம் தவறாமல் வேலையைச் செய்யும் சிலர் இருப்பது போலவே, எப்போதும் லேட்டாகவே வருவது, வேலையைச் சொன்ன நேரத்தில் முடிக்காமல் இருப்பது என்றும் சிலர் இருக்கிறார்கள்.
சூழ்நிலைதான் காரணம் என்று சொல்லலாம். ஆனால், எப்போதுமே சூழ்நிலையைக் காரணம் சொல்லக் கூடாதே! எங்கு போவதென்றாலும் லேட்டாக வருவது தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் தேவையற்ற டென்ஷனாகவே முடியும். ஏன் அப்படி எப்போதுமே லேட்டாக வேண்டும்?
நியாயமான காரணங்களும் இருக்கக்கூடும். டிராஃபிக், வரும் வழியில் திடீரென்று அவசர வேலை, ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது தவிர்க்க முடியாத வேறொரு வேலை வந்துவிடுவது என்று சில நேரங்களில் உண்மையிலேயே நியாயமான காரனங்கள் இருக்கும். ஆனால், பெரும்பாலும் ‘கொஞ்ச நேரம் லேட்டானா என்னாகிடும்?’ என்ற மனநிலையே நம் தாமதங்களுக்குக் காரணமாகிறது. இது மட்டுமல்ல, அப்படி லேட்டாகும் பட்சத்தில், பொய் சொல்லி சமாளித்துவிடலாம் என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது.

 

தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் அதில் மறுயோசனைக்கு இடமில்லை. ஆனால், கவனமில்லாமல் லேட்டாவது, லேட்டாக்குவது நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சினைதான்.
இதிலேயே இன்னொரு வகை இருக்கிறது. தன்னை யார் பார்க்க வந்தாலும், தன்னிடம் யார் பேச நினைத்தாலும், அவர்களைக் காத்திருக்கச் செய்வது. சிலர் வேலை காரணமாக அப்படிச் செய்வார்கள். ஆனால், சிலர் வேண்டுமென்றே செய்வதைக் கவனித்திருக்கிறேன்.
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு
என்று கண்ணதாசனின் பாடல் ஒன்றில் வரும். இது காதலுக்கும் காதலர்களுக்குப் பொருந்தும். ஆனால், நடைமுறை வாழ்வில் மற்ற உறவுகளுக்கு, நமது அன்றாட வேலைகளுக்குப் பொருந்தாது.
எப்போது கால் செய்தாலும் எடுக்காமல் இருப்பது; மெசேஜைப் பார்த்துவிட்டு பதில் அனுப்பாமல் இருப்பது; பார்க்க வரும் இடத்தில் காத்திருக்க வைப்பது ஆகியவை சிலரது பழக்கம். இப்படிச் செய்வதன் மூலம், தன்னுடைய மதிப்பு அதிகரிப்பதாக உணர்கிறார்கள். அதாவது, நம்மைப் பார்க்கவும் நம்மிடம் பேசவும் காத்திருக்கிறார்கள் என்பதையே ஒருவிதமான மதிப்பாக நினைக்கிறார்கள். இதன் மூலம், ஏதோவொரு நெருடலை அல்லது உளவியல் பிரச்சினையைச் சமன் செய்ய முயல்கிறார்கள்.

 

MDMK

ஆனால், உண்மையில் இவ்வனைத்துச் செயல்களுமே நம்மிடம் உள்ள ஏதோ ஒரு குறையை, சிக்கலைத்தான் நமக்குக் காட்டுகின்றன. எப்படிப் பல வேலைகளைச் சமாளிப்பது என்று தெரியாமல் இருப்பது, பிறரைக் காக்க வைப்பது நல்ல பண்பல்ல என்பதை உணராமல் இருப்பது, நேரத்தைக் கையாளும் முறையில்தான் நம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது என்று இந்தக் குறைகளைப் பட்டியலிடலாம். இந்தக் குறைகள் நபருக்கு நபர், காலத்துக்குக் காலம் வேறுபடும். ஆனால், தாமதத்தை வழக்கமாகக் கொள்ளுதலும், எப்போதும் பிறரைக் காக்க வைப்பதும் பெருமையிலிருந்து அல்ல; குறையிலிருந்து பிறப்பவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, பிறரைக் காத்திருக்கச் செய்து, காலம் தவறுவது ஆகியவற்றின் வேரை ஆராய்ந்து அறிந்து சரி செய்துகொள்வதே நமக்கும் பிறருக்கும் நல்லது.

 

Kavi furniture

– ஆசிஃபா

Pranav city

Leave A Reply

Your email address will not be published.