லால்குடி தீயணைப்பு நிலையம் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்படுமா?

லால்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தேவையான இடம் இருந்தும் புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்காததால், தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கமா?
தீ விபத்து, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காப்பாற்றுதல் ஆகியவை தீயணைப்பு வீரர்களின் பிரதான பணியாக உள்ளது. இந்த பணிகளின் போது தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் களத்தில் இறங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால், லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமாக இடம் இருந்தும் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவது வேதனைக்குரிய விசயமாக உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்தில் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடந்த 1997 லால்குடியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் கொண்டு வரப்பட்டது.

அன்று முதல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் லால்குடியில் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலை அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள லால்குடி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. லால்குடி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி 5 சென்ட் இடத்தை கடந்த 2004 ம் ஆண்டு தீயணைப்பு நிலையத்துக்கு வழங்கியது. அன்றிலிருந்து 2005 ம் ஆண்டு வரை பேரூராட்சி வழங்கிய இடத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது.


லால்குடி தீயணைப்பு நிலையம் இயங்கி வந்த பழைய கட்டிடம்; நாளடைவில் சிதலமடைந்து, பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழுந்தது. மேலும் அங்கு தீயணைப்பு வீரர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் அந்த பழைய கட்டிடமும் இடிந்து விழும் நிலைக்கு சென்றது. இதனால் தீயணைப்பு அலுவலகத்தை அங்கிருந்து காலி செய்து விட்டு, வாடகை கட்டிடத்துக்கு சென்றனர். கடந்த 14 வருடங்களாக தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
தீயணைப்பு நிலையத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 11 ஆயிரத்து 470 ஐ வாடகையாக அரசு செலுத்தி வருகிறது. இங்கு தீயணைப்பு வாகனத்தை நிறுத்த போதிய இடம் வசதி இல்லை என தீயணைப்பு நிலைய வீரர்கள் குமுறுகின்றனர். குறிப்பாக தீயணைப்பு கருவிகளை பாதுகாப்பாக வைத்து பராமாரிக்க முடியாத நிலைமை உள்ளதாக தீயணைப்பு நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தற்போது தீயணைப்பு நிலையம் இயங்கி வரும் வாடகை கட்டிடத்தை காலி செய்ய நேர்ந்தால், தீயணைப்பு நிலையத்தை வேற இடத்திற்கு இடமாற்றம் செய்ய, வாடகைக்கு இடம் தேடி அலையும் பரிதாப நிலை உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் வேதனையில் உள்ளனர்.
கடந்த 2011, 2016 ம் ஆண்டுகளில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான அறிக்கையை அதிகாரிகள் தயார் செய்து அதை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இது நாள்வரை எந்த பயனும் இல்லை.
எனவே லால்குடி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தீயணைப்பு நிலைய வீரர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
