மத்திய பட்ஜெட்டுக்கு முன் அல்வா ஏன் தெரியுமா ?

0
gif 1

மத்திய பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுவதற்கு முன்பாக அதிகாரிகளுக்கு அல்வா வழங்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (ஜூன் 22) நடைபெற்றது. அப்போது அவருடன் இணையமைச்சர் அனுராக் தாகூர், நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், வருவாய் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலாளர் அதானு சக்கரபர்த்தி, நிதிச்சேவைகள் துறை செயலாளர் ராஜிவ் குமார் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

ஒவ்வொரு முக்கியமான பணியையும் தொடங்குவதற்கு முன் இனிப்புகளுடன் தொடங்கும் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கு முன் அல்வா பகிரப்பட்டு பணிகளை தொடங்குவது வழக்கம். ஜூலை 5ஆம் தேதியன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

 

அல்வா நிகழ்ச்சிக்கு பின் பட்ஜெட் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன?

gif 3
gif 4

மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியின் தொடக்க நிகழ்வே அல்வா நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் எவ்வித பூஜையோ, வழிபாடோ இடம்பெறாது. பெரிய கடாயில் அல்வா தயாரிக்கப்பட்டு நிதியமைச்சக அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகு நிதியமைச்சகத்தை சேர்ந்த சுமார் 100 அதிகாரிகள் வடக்குத் தொகுதியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தின் அடித்தளத்தில் அடைக்கப்படுவர்.
அங்கு பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணிகள் தொடங்கும். பட்ஜெட் அச்சிடும் பணிகள் இந்தியாவின் மிக ரகசியமான செயல்பாடுகளில் ஒன்றாகும். அல்வா நிகழ்ச்சி முடிந்தபிறகு பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் இந்த இடத்தில் முழுவதுமாக அடைக்கப்படுவர். நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு மட்டுமே இவர்கள் வெளியே அனுமதிக்கப்படுவர். பட்ஜெட் அச்சிடும் பணிகள் நடைபெறும் காலத்தில் அதிகாரிகள் யாரும் மொபைல் போன், இமெயில் என எவ்வித தொடர்புகளையும் பயன்படுத்த முடியாது. அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசவும் அனுமதிக்கப்படாது.

 

தகவல்கள் கசிவதை தடுக்கவும், மொபைல் அழைப்புகளுக்கு முட்டுக்கட்டை போடவும் சக்திவாய்ந்த ஜாம்மர் கருவி பொருத்தப்படும். பட்ஜெட் அச்சிடும் அறையிலும் தொலைபேசிகள் கிடையாது. நிதியமைச்சகத்தில் பொருத்தப்பட்டுள்ள தொலைபேசிகளும் புலனாய்வுத் துறை கண்காணிப்பில் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் உளவுத் துறை சோதனையும் மேற்கொள்ள வாய்ப்புண்டு. கணினிகளின் இணைப்புகளும் துண்டிக்கப்படும். அதிக பாதுகாப்பு கொண்ட அந்த அறைக்குள் போகவும், வரவும் நிதியமைச்சருக்கு மட்டுமே அதிகாரமுண்டு.

 

1950ஆம் ஆண்டு வரை பட்ஜெட் ஆவணங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் அச்சிடப்பட்டன. அந்தாண்டில் பட்ஜெட் அறிக்கை கசிந்ததைத் தொடர்ந்து அச்சு அறையை மிண்டோ சாலைக்கு அரசு மாற்றியது. பின்னர் 1980ஆம் ஆண்டு முதல் வடக்குத் தொகுதியிலுள்ள நிதியமைச்சக அலுவலகத்தின் அடித்தளத்தில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.

gif 2

Leave A Reply

Your email address will not be published.