திருச்சியில் தங்கையின் காதலனை கொன்ற அண்ணன்

0
Business trichy

திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்டு பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன் (வயது 30). இவரது தந்தை இளங்கோவன் மறைந்து விட்டார். தாய் ராஜேஸ்வரியுடன் சத்யநாராயணன் வசித்து வந்தார். இவர் சென்னை அம்பத்தூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு தொழில் நஷ்டமடைந்ததால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்தார். திருச்சியில் பிரபல தனியார் ஓட்டலில் மேற்பார்வையாளராக சேர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சத்யநாராயணனுக்கும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஹென்றி வினோத்தின் (31) 19 வயதுடைய தங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டனர். மேலும் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் பரிமாறி வந்தனர்.

ஹென்றி வினோத்துடன் சத்யநாராயணனுக்கும் நட்பு ரீதியாக பழக்கம் இருந்தது. இந்த நிலையில் தங்கையை சத்யநாராயணன் காதலித்து வந்த விவகாரம் ஹென்றி வினோத்திற்கு தெரியவந்தது. தனது தங்கையின் செல்போனை பார்த்தபோது அதில் புகைப்படங்கள் பல அவருடன் சேர்ந்து எடுத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வாட்ஸ்-அப் மெசேஜையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

Half page

இந்த நிலையில் சத்யநாராயணனிடம் தனது தங்கையை காதலித்து வருவதை கைவிடுமாறு ஹென்றி வினோத் வலியுறுத்தினார். மேலும் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசத்தையும், வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் எடுத்துக்கூறியிருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து காதலித்து வந்தார். இதனால் ஹென்றி வினோத் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் ஹென்றி வினோத் மற்றும் அவரது நண்பர்கள் பிரான்சிஸ் ராஜ் (31), சந்தியாகு (30) ஆகிய 3 பேரும் சேர்ந்து சத்யநாராயணனை நேற்று முன்தினம் இரவு பெல்ஸ் கிரவுண்டு அருகே உள்ள நாகம்மாள் கோவில் பக்கம் மது குடிக்க அழைத்து சென்றனர். அப்போது அங்கு வைத்து தனது தங்கையின் காதலை கைவிடுமாறு சத்யநாராயணனிடம் ஹென்றி வினோத் கூறினார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹென்றி வினோத் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் சத்யநாராயணனின் தலையில் அடித்தார். மேலும் அவரது விலா எலும்பு பகுதியிலும் குத்தினார். இதையடுத்து அவர் அபயக்குரல் எழுப்பினார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் சத்யநாராயணன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அக்கம்பக்கத்தினர் வருவதை கண்டதும் ஹென்றி வினோத் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யநாராயணனை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அங்கிருந்த சரக்கு வேனில் அவரை ஏற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சத்யநாராயணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கரை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சத்யநாராயணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு கிடந்த பீர் பாட்டில்கள், உறைந்து கிடந்த ரத்தம் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் விரைந்து வந்து விசாரித்தார். பின்னர் தலைமறைவானவர்களை பிடிக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாலக்கரை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் கொலையான சத்யநாராயணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் ஹென்றி வினோத் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரான்சிஸ் ராஜ், சந்தியாகு ஆகிய 3 பேரையும் நேற்று மதியம் பாலக்கரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரும் கூலி வேலை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தங்கையுடான காதலை கைவிட மறுத்த வாலிபரை அண்ணன் உள்பட 3 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Full Page

Leave A Reply

Your email address will not be published.