கலகக்குரல் அல்ல: கே.என்.நேரு

0
Business trichy

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது கலகக் குரல் அல்ல என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

தண்ணீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சியில் ஜூன் 22 திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் விளக்கமளித்திருந்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக திருச்சி திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, “உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவ்வாறு கூறினேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை” என்று தெரிவித்தார்.

Kavi furniture
MDMK

உங்களிடமிருந்து ஒரு கலகக்குரலை தலைமை எழுப்புகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா என்று செய்தியாளர் கேட்க, “நான் பேசியது கலகக் குரல் இல்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தையே நான் முன்வைத்தேன். திருச்சியிலிருந்து எங்களுடைய குரல் இது. நீங்கள் நினைத்து வந்தது போல வேறு எதுவும் இல்லை. ஒரு சாதாரண மாவட்டச் செயலாளராக என்னுடைய எண்ணத்தை தலைவருக்கு சொன்னேன். தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறியுள்ளேன். அதனை இவ்வளவு பெரிதாக்கிவிட்டீர்கள்” என்றார்.

ஆனால் உங்களுடைய இந்த ஒரு வார்த்தை தமிழகத்தையே புரட்டிப் போட்டுவிட்டதே என்ற கேள்விக்கு, “ஏற்கனவே தேர்வில் காப்பியடிக்கவிடுவோம் என்று நான் சொன்னதை பெரிதுபடுத்தினார்கள். இன்றைய விவாதம் என்னுடையது ஆகிவிட்டது. தனித்துப் போட்டியிடலாமா என்று தலைவர் கூறியபோது, அனைவரையும் அனுசரித்துச் செல்வோம் என்று கூறியவர்களில் நானும் ஒருவன். கீழ்மட்டத் தொண்டன் கோபித்துக்கொண்டால் சொல்லமாட்டானா? அதுபோலதான் எனது கருத்தை வெளிப்படுத்தினேன். இதில் மனக்குமுறல் ஒன்றுமில்லை” என்று பதிலளித்தார்.

மேலும், ஊடகத்தினருக்கு இன்றைக்கு நான் தீனியாகமாட்டேன் என்றவர், “நான் திமுகவில் மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். திருச்சி மக்களவைத் தொகுதி, மேயர் பதவி ஆகியவை திமுகவுக்கு கிடைக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பேன். தன்னிலை விளக்கத்திற்காகவே இப்போது பேட்டியளிக்கிறேன். இதுதொடர்பாக திமுக தலைவர் என்னிடம் பேசவில்லை” என்றார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.