உயிர் வளர்ப்போம்-26

கதை வழி மருத்துவம் (அருளமுதம் எனும் அருமருந்து)

0
full

உடலில் சிந்தனை உண்டாகின்ற களமாக விளங்குவதே சித்தம்

அதுவரை அங்கு கண்களை மூடி அமர்ந்திருந்த  வாலைச்செல்வி திடீரென நீல நிறத்தில் ஒளிர தொடங்கினாள். கருநீல நிறத்தில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்த வாலைச்செல்வியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அவளது உடல் மேல்நோக்கி எழும்பத் தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணை நோக்கி உயர்ந்தெழுந்த அவள் விண்ணிலே ஒரு புள்ளியாக மாறி மறைந்து போனாள். இதனைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர் “ஐயனே, இங்கு என்ன நடந்தது?” என மன்னன் ஆச்சரியம் அகலாமல்  யோகியரிடம் கேட்டான். அதற்கு யோகியார் “வாலைச்செல்வி இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டாள்.

இந்த அபூர்வ காட்சியை கண்டு  ஆச்சரியப்படுகின்ற எம் அன்பான மக்களே, உங்களுக்குள் நீலமணியாக விளங்குகின்ற மனதினை தம் வசப்படுத்தினால் உங்கள் எல்லோருக்கும் இது சாத்தியமே. இதனை உங்கள் அனைவருக்கும் குறிப்பால் உணர்த்தவே இறைவன் இத்திருவிளையாடலை இங்கு அரங்கேற்றியுள்ளார் . இப்பொழுது அனைவரும் கலைந்து சென்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் காலையில் இதே இடத்தில் ஒன்று கூடலாம் ” எனக்கூறிவிட்டு யோகியார் அங்கிருந்து அகன்று சென்று விட்டார். இதனைக் கண்ட அனைவரும் இறைவனின் கருணையை எண்ணி வெகுநேரம் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்து விட்டு  மனம் நெகிழ்ந்த படி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

poster

மறுநாள் காலை அனைவரும் யோகியாரின் ஆணைப்படி அதே இடத்தில் மீண்டும் குழுமியிருந்தனர். அனைவருடைய மனதிலும் முதல் நாள் மாலை நடந்த நிகழ்வு அகலாமல் இருந்தது. இதுநாள் வரை தம்முடன் இருந்த வாலைச்செல்வி திடீரென விண்ணில் மாயமாய் மறைந்தது அனைவரின் மனதிலும் ஒரு சிறு வருத்தத்தையும் அளித்தது. அவர்களின் ஆச்சரியமும் வருத்தமும் கலந்த உணர்வுகள் அவர்கள் முகத்தில் வெளிப்பட்டன அனைவரின் முகபாவத்தையும் புரிந்து கொண்ட யோகியார் அவர்கள் முன் பேசலானார். “அன்பர்களே உங்கள் அனைவரது மனதிலும் உள்ளதை நான் நன்கு அறிவேன் நம்மிடம் சில காலம் ஒன்றாக இருந்து வந்த வாலைச்செல்வி திடீரென மாயமாய் மறைந்து இறைவனை சேர்ந்தது தங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் அளிக்கின்றது.

பொதுவாக மனிதர்கள் எந்த ஒன்று தம்முடன் சில காலம் இருந்தாலும் அதன்மீது பற்று கொள்வது வழக்கமான ஒன்றே இந்த அதீத பற்று தான் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலை கடப்பதற்கு தடையாக அமைகின்றது. தம்முடன் இருக்கக்கூடிய எதுவாயினும் அதன்மீது பற்று கொள்வதை விடுத்து தங்கள் மனதினை இறைவனின் பால் செலுத்தி அமைதி கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அனைவரும் கடைத்தேறும் மார்க்கமாகும்.” யோகியாரின் கூற்றை கேட்ட அனைவரின் மனதும் சற்று நிம்மதி அடைந்து இறைவனை நாடத்தொடங்கியது. அனைவரின் முகங்களிலும் நிம்மதியை கண்டு மகிழ்வுற்ற யோகியார் அடுத்தபடியாக புத்தியை பற்றிய விளக்கத்தினை தொடர்ந்தார்.

“அன்பர்களே, மனதுக்கு அடுத்தபடியாக வருகின்ற அந்தகரணம் புத்தியாகும்.

half 2

புத்தி: இந்த புத்தியானது நமக்குள் இருந்து நம்மை அறிவுறுத்தி வழிநடத்த உதவுவதாகும். எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து அதில் உள்ள நன்மை தீமைகளை உணர்த்துவது புத்தியாகும். மேலும் நம் மனம் செய்ய நினைக்கும் செயல்களை சீர்தூக்கிப் பார்த்து அது சரியா? தவறா? என ஆராய்ந்து வழி நடத்துவதே புத்தியாகும். இது நல்லோர்களுக்கு நற்புத்தியாகவும், தீயோர்க்கு துர்புத்தியாகவும் செயல்படும். இந்த புத்தி சரிவர செயல்படாதவர்கள் மந்த புத்திக்காரர்கள் என அழைக்கப்படுவார்கள். அத்தகையோர்களுடைய செயல்பாடுகள் சற்று தாமதமாகவும் தெளிவின்றியும் இருக்கும். இவர்களை புத்திக்கூர்மையை அதிகரிக்கக்கூடிய பயிற்சிகளாகிய தோப்பு கரணம், சிரசாசனம், மூச்சு பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள செய்தால் நல்ல முன்னேற்றத்தினை காணலாம்.

அந்தக்கரணங்களில் மூன்றாவதாக விளங்குவது சித்தமாகும்.

சித்தம்: நமது உடலில் சிந்தனை உண்டாகின்ற களமாக விளங்குவதே சித்தம். நம் மனதில் உண்டாக கூடிய சிந்தனைகளுக்கு இடம் அளிப்பது சித்தம் ஆகும். மனம் என்பதே எல்லையற்ற ஆகாயமாக நம் உடலில் விளங்குகின்ற பொழுது, அம்மனதுக்கு இடம் அளிக்க கூடிய சித்தம் எத்துனை சிறப்பு வாய்ந்தது என்பதினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த சித்தத்தையே வெளிக்குள் வெளி என சித்தர்கள் குறிப்பிடுவார்கள். மனவெளிக்கு இடம் அளிக்கக் கூடிய சித்தம், வெளியைக் கடந்து நிற்கும் வெளியாகும்.

இந்த சித்தத்தை சிவத்தின் பால் வைத்தவர்களே சித்தர்கள் என அழைக்கப் படுகிறார்கள். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற பழமொழி உருவானது.” என யோகியார் விளக்கிக் கொண்டிருந்த வேளையில் மன்னனுடைய மனதில் ஒரு பெரும் சந்தேகம் எழுந்தது, அதனை யோகியரிடம் பணிவுடன் கேட்கலானான். “ஐயனே சிவன் என்பவர் கயிலையில் புலித்தோல் ஆசனத்தில் பார்வதி தேவியுடன் அமர்ந்து உலகில் அழித்தல் தொழிலை மேற்கொண்டு இருப்பவர் அல்லவா? அவரின்பால் தான் நம் சித்தத்தை வைக்க வேண்டுமா?” என கேள்விகளை அடுக்கினான்.

மன்னரின் இக்கேள்விகளை கேட்டு பரிகாசமாக நகைத்த யோகியார் மன்னா சிவம் என்பது ஒரு மனிதனையோ அல்லது மனிதர்கள் வணங்கக்கூடிய ஏதேனும் ஒரு உருவத்தையோ குறிப்பிடுவது அல்ல சிவம் அல்லது சிவன் என்கிற வார்த்தை இறைவனையே குறிக்கும் இறைவன் எனப்படுபவன் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக ஏகமாய் விளங்குபவன். நம்முடைய அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டு விளங்கக் கூடியவன். நாம் அவனை நோக்கி பணியும் பொழுது நம்மிடம் நெருங்கி வரக்கூடியவன்.

நம்முடைய ஊனக் கண்களும் குறை அறிவும் நம்மை எப்போதும் இறைவனிடம் சேர்ப்பதில்லை. பணிவும் அர்ப்பணிப்புமே நம்மை இறைவனிடம் சேர்க்கக்கூடிய கருவிகளாகும். பணிவுடன் நம் மனதினை கடந்து சித்தத்தினை அடைந்து சித்தத்தினை இறைவனுக்கு அர்ப்பணித்து இறைவனிடம் சேரலாம். இதனையே வள்ளல் பெருமான் வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் எனக் குறிப்பிடுகிறார். நீங்கள் கூறுகின்ற யாவும் நம்மைப் போன்ற மனிதர்களால் புனையப்பட்ட புராணங்களும் இதிகாசங்களும் ஆகும். இறைவனின் உண்மை நிலையை உணர இவைகள் நமக்கு உதவுவதில்லை. சைவ சித்தாந்தம் சிவம் என குறிப்பிடுவதும், இஸ்லாம் அல்லாஹ் என குறிப்பிடுவதும், கிறித்தவம் தேவன் என குறிப்பிடுவதும் இந்த ஏக இறைவனை தான்.” என தெளிவுபடுத்தினார். யோகியாரின் தெளிவான விளக்கத்தினை கேட்ட மன்னன் சந்தேகம் நீங்கி தெளிவு பெற்றான்.

half 1

Leave A Reply

Your email address will not be published.