அறிவோம் தொல்லியல்-20 பயணங்கள் முடிவதில்லை…

0
1

இலக்கியத்தில் படித்ததை முதன்முதலாய் மெய்ப்பித்தது நடுகல் தான்

புலிமான்கோம்பை நடுகற்கள் :

இவ்வூரில் மொத்தம் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன.

முதல் நடுகல்:

1.கல்

2.பேடு தீயன் அந்தவன்

3.கூடல்ஊர் ஆகோள்.

கூடலூர் என்ற ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் இறந்துபட்ட தீயன் அந்தவன் என்ற வீரன் நினைவாய் எழுப்பப்பட்ட நடுகல் இது.

இக்கல் நடுகற்களின் தொடக்ககால நிலைக்கு ஓர் சான்று. ஆரம்பட்டத்தில் நடுகற்களில் இறந்தவரின் உருவம் பொறிக்கும் வழக்கம் இல்லை. இவ்வழக்கம் கி.பி 6 ம் நூற்றாண்டிற்கு பிறகே ஏற்படுகிறது. அதன்பின் தொடர்ச்சியாக வீரரின் உருவப்பொறிப்புடன் கிடைக்கும் கல் தமிழகமெங்கும் கிடைக்கிறது!  சங்க இலக்கியத்தில் ஏகப்பட்ட குறிப்புகள் நடுகல் குறித்து வருகிறது! இலக்கியத்தில் படித்ததை முதன்முதலாய் மெய்ப்பித்தது இந்நடுகல். இதிலிருந்து இலக்கியத்தில் கூறப்பட்ட நிகழ்ச்சிகள் கற்பனையல்ல, அவையாவும் உண்மையே என கூற இந்நடுகல் ஓர் சான்றாகும்.

தொல்லியலறிஞர். ஐராவதம் மகாதேவன் இக்கல்வெட்டிற்கு ஓர் மறுவாசிப்பு அளித்துள்ளார். அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இருந்தது.

அதன்படி இக்கல்வெட்டை,

1.கூடல் ஊர் ஆகோள்

2.பேடு தீயன் அந்தவன்

3.கல்

இவ்வாறு படிக்கும்போது இந்நடுகல் நேரடியாகவே “கூடலூரில் நடந்த ஆகோள் பூசலில் இறந்த தீயன் அந்தவனின் நடுகல்” என பொருள் தரும்.

2

இதில் வரும் பேடு என்பதனை பட்டான் என பொருள் கொள்ளலாம். இதிலுள்ள தீயன் என்பதை குடிப்பெயராய் கொள்ளலாம். இன்றுவரை கேரத்தில் தீயர் என்ற ஓர் இனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவன் எனும் பெயர் பெருங்கற்கால பானையோடு சின்னங்களில் நிறைய இடத்தில் வருகிறது! இப்பெயர் அக்காலகட்டத்தில் அதிகம் புழக்கத்தில் உள்ள பெயராய் உள்ளது. புறநானூற்றில் வரும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நண்பன் பெயர் கூட அந்துவன் சாத்தன் தான்.

அக்காலத்தில் பெருஞ்செல்வாய் மதிக்கப்பட்ட ஆநிரைகளை கவரும்பொருட்டு நிகழ்ந்த பூசல்களை(சண்டை) தொல்காப்பியம் ஆகோள் என குறிப்பிடுகிறது. இந்நடுகல்லிலும் அவ்வாறே ஆகோள் என குறிப்பிடப்பட்டது, சிறப்பான ஒன்று. வருங்காலத்தில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் கல்வெட்டின் வாயிலாக கிடைக்க நிறைய வாய்ப்புள்து. அதன் முதல் வெளிச்சம் இந்நடுகல்!

இந்நடுகல் ஆநிரைகளை கவர்ந்து வரும் “கரந்தைப்போரில்” இறந்தவனுக்கு எழுப்பப்பட்டது என கருதப்படுகிறது!  எழுத்தமைதி வைத்து இதன் காலம் கி.மு.4 ம் நூற்றாண்டாக கொள்ளப்படுகிறது. அவ்வகையில் குறியீடுகள், கீறல்கள் தவிர்த்து இந்தியாவின் தொன்மையான கல்வெட்டு இதுவேயாகும்.

இரண்டாம் நடுகல்:

“….அன்ஊர் அதன்

…..ன் அன் கல்”

இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.

“…அனூராதன் ….னன் கல்” என இதனை படித்துபொருள் கொண்டுள்ளனர்.

இதன்படி அனூரைச் சேர்ந்த ஆதன் என்பவரின் மகனுக்கு எழுப்பிய நடுகல் என பொருள் கொள்ளலாம்!

மூன்றாம் நடுகல்:

“வேள்ஊர் அவ்வன் பதவன்”

இதில்வரும் வேள் என்பது சங்ககால வேளிர் ஒருவர் ஆண்ட ஊர் என கொள்ளலாம். வேளூரைச் சேர்ந்த பதவன் மகனாகிய அவ்வனுக்கு எழுப்பிய நடுகல்லாக இதனை கொள்ளலாம். இதன் காலம் கி.மு.3 ம் நூற்றாண்டாய் கணிக்கப்படுகிறது.

இக்கல்வெட்டுகளின் சிறப்புயாதெனில், இக்காலகட்டத்தில்(கி.மு.3) இந்தியாவின் பிற இடங்களில் கிடைத்த கல்வெட்டுகள் யாவும் மன்னர்களின் கல்வெட்டாகவோ, அவர்களின் ஆணை சார்ந்ததாகவோ உள்ளது.

ஆனால் புலிமான்கோம்பை நடுகற்கள் சாதாரண குடிமக்கள் எழுப்பிய நடுகற்களாகும், எனில் சாதாரண மக்கள் முதற்கொண்டு நம் தமிழகத்தில் எழுத்தறிவு பெற்று விளங்கியது, புலனாகிறது. எழுத்தறிவு பெற்று விளங்க குறைந்தது 300 வருடம் முன்பு அம்மொழி சிறந்து விளங்கியிருக்க வேண்டும். எனில் நம்மொழியின் தொன்மையை இதன் வாயிலாக உணரலாம்.

வரும் வாரம் மதுரையில் கண்றியப்பட்ட சங்ககால மன்னன் நெடுஞ்செழியனின் கல்வெட்டை காண்போம்.

3

Leave A Reply

Your email address will not be published.