ஆதிமகள் 21

0
full

காயத்ரியும், ஜானகி அம்மாளும் சொல்லிய வார்த்தையை ஓரளவு யூகித்துக் கொண்டு, காயத்ரியின் தயக்கத்தையும், குழப்பத்தையும் தன் மீது காயத்ரி கொண்டுள்ள பய உணர்வையும் போக்க “அவ்வளவு தானே விடுங்க பார்த்துக்கலாம், நான் இருக்கேன்” எனக் கூறி சண்முகநாதன் அந்த சூழலை மூவரும் கடக்க உதவினாலும், காயத்ரியை தவிர சண்முகநாதனும், ஜானகி அம்மாளும் ஒரு பெரும் பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொண்டதை உணர்ந்தார்கள்.

தன் மீதிருந்த பாரத்தை சண்முகம் தோளில் ஜானகி அம்மாள் இறக்கி வைத்தாலும், தான் அவர் தோளில் ஏற்றியது சுமையாக மாறாமல் தீபமாக பிரகாசித்து தனது இல்லத்தில் ஒளி வீச வேண்டும் என அவள் தனது குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டாள்.

இரவு வெகு நேரமாகியும் காயத்ரிக்கு தூக்கம் பிடிக்காமல் போனது. தனது எண்ணங்கள், ஆசைகள், சரியா? தவறா என தனக்குத்தானே விசாரணை செய்துகொள்ள இனி தேவையில்லை. அப்பா, அம்மாவிடம் விசயத்தை கூறியாகிவிட்டது. இனி அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என அவள் மனதுக்கு அவள் கட்டளையிட்டாலும்,  தான் கரணின் மீது வைத்திருந்தது விருப்பம் அல்ல நேசம் என்று அப்பா புரிந்து கொண்டாரா, அப்பா இருக்கட்டும் தனது நேசத்தை கரண் புரிந்து கொண்டானா? இந்த விசயத்தை கரணிடம் பேசி உண்டு இல்லை என தெரிந்து கொண்டு பின்னர் அப்பா, அம்மாவிடம் பேசி இருக்கலாமோ, என்னுடைய சந்தோசத்திற்காக மட்டுமே வாழும் இவர்கள், கரண் ஏதேனும் தவறான பதில் கூறிவிட்டால் தன்னைவிட இவர்கள் தானே அதிக கலவரப்படுவார்கள். அதனால் முன்கூட்டியே கரணிடம் நாம் பேசிவிட்டு, அவனும் தன்னை நேசித்தால் மட்டுமே அப்பாவிடம் இதைப்பற்றி பேசியிருக்கலாமே என யோசித்தவள். அந்த நடுநிசியிலும் சென்று அப்பா உறங்கிக் கொண்டிருக்கும் அறையின் கதவை தட்டினாள். அறைக்கதவு உடனே திறந்தது. அப்பாவும் உறங்கவில்லை என்பதை புரிந்து கொண்டாள். இவ்வளவு நேரமும் அம்மாவிடம் கரணைப் பற்றியும், தன்னைப் பற்றியும் தான் பேசிக் கொண்டிருந்திருப்பார் என்பதை புரிந்து கொண்டவள், நேராக விசயத்திற்கு வந்தாள். “அப்பா இப்போதைக்கு நீங்க கரண்கிட்ட எதுவும் பேச வேண்டாம்” சந்தர்ப்பம் பார்த்து நானே பேசிட்டு சொல்றேன். அதுக்கப்புறம் நீங்க பேசுங்க” என்றாள்.

poster

சண்முகநாதனால் காயத்ரியின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் அரை மனதுடன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் “சரிம்மா பேசிக்கலாம். நீ எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காம போய் படுத்துத் தூங்கு. எல்லாம் நல்லதுதான் நடக்கும் ” எனக் கூறி அவளது அறைக்கு அனுப்பி வைத்தார்.

ukr

காயத்ரி தனது அப்பாவை நினைத்து பிரமித்துப் போனாள். தான் எந்தளவிலும், மனதளவில் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது, ஏன் இன்று ஒருநாள் இந்த இரவு தூக்கம் கூட என்னுடைய மனக்குழப்பத்தால் கெட்டுவிடக் கூடாது என ஆறுதல் சொல்லும் தனது அப்பாவை நினைத்து அவளது விழியோரங்களில் கண்ணீர் முட்டியது.

எந்த சூழலில், எந்த காலத்திலும் தனது தந்தையின் மனம் நோக திரும்பிவிடக் கூடாது என அவள் தனக்குள் தீர்க்கமாக முடிவு செய்து கொண்டாள். தனக்கு திருமண வயதாகியும் இன்னும் ஒரு மூன்று, நான்கு வயது குழந்தையை காப்பது போல் தன்னை பார்த்துக் கொள்வதும், தனது சிந்தனைக்கும், முடிவுக்கும், மதிப்பளித்து, ஆராய்ந்து அதை இவளுக்கு சாதகமாக முடிக்க, அவர் ஆயத்தமாவதையும் நினைத்து அப்பாவின் முடிவே தன் முடிவு என நினைத்துக் கொண்டாள்.

ஆணவக் கொலைகள் பற்றி காயத்ரி பல சந்தர்ப்பங்களில் செய்திகளில் படித்தும் கேட்டும் இருக்கிறாள். அது முழுக்க முழுக்க அன்பற்றவர்களின் போக்கு, அப்படியொரு செய்தியை அப்பாவால் படிக்கவோ, கேட்கவோ கூட முடியாது. அந்தளவிற்கு அன்பின் மொத்த வடிவம் அவர். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், இவரை எந்த சக்தியாலும் கூர்மைப்படுத்தி ஆயுதமாக்க முடியாது. இவர் பாசம் வீசும் பூக்களை மட்டுமே பூக்கும் மரம், கரண் மறுத்தாலும், சம்மதித்தாலும் அப்பாவே இறுதி முடிவு செய்யட்டும் என காயத்ரி முடிவு செய்து கொண்டாள்.

சண்முகநாதனின், அணுகுமுறையும், அக்கறையும், காயத்ரியின் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பும், காயத்ரி கரண் மீது கொண்டிருந்த காதலை, நேசத்தை இரண்டாம்பட்சமாக்கியது.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.