பதினென் சித்தர்களில் முதலாவதாக அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள்

அனைவருக்கும் சித்தர்களைப்பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அவர்கள் இன்றும் நினைப்பவர் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மை.
அந்தவகையில் சித்தர்களைப் பற்றி உங்களுக்கு சில செய்திகளை
நம்ம திருச்சி சொல்ல இருக்கிறது. முதலில்

அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள்

முற்பிறவி வாழ்க்கை
சிவனார் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தியாக அவதாரம் செய்திருக்கிறார். இவர் யாரிடமும் தீட்சை வாங்கியவர் அல்லர். உலகின் முதல் குருவாகத் தோன்றி பலருக்கு தீட்சை அளித்து, உலகை உய்விப்பதற்காக ஒரு சித்தர் பரம்பரையையே உருவாக்கியவர் என்பதும், கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் மன்மத வருடம் ஆவணிமாதம் 12-ம் நாள் (29-08-1835) புதன்கிழமை வளர்பிறை திருதியை திதி உத்திரம் நட்சத்திரம் கூடிய நன்னாளில் பகல் 12 மணி அளவில் விருச்சிக லக்னம் கன்னி ராசி கூடிய நல்லோரையில் திருவாரூர் வன்மீகபுரத்தில் ஜீவசமாதி பூண்டு கர்ம வினை பாதிப்புகளுக்கு உள்ளாகி இல்லற வாழ்வில் ஈடுபட்டுவரும் நம்மையெல்லாம் கரையேற்ற வேண்டிய அருட் குருவாக இருந்து வழிகாட்டி வருபவரும், அருவமாய் இருந்து அண்டங்கள் அனைத்தையும் இயக்கிவரும் அந்த ஆதிபரம்பொருளே அன்றி வேறு அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
பரம்பொருள் குருதட்சிணாமூர்த்தியாக முதல் அவதாரம் எடுத்திருந்தபோது, அதாவது 6000 ஆண்டுகளுக்கு முன் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபதேசம் செய்திருக்கிறார். அவர்களில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் கல்லால மரத்தடியில் இருந்து சொல்லாமல் சொல்லி (மௌன நிலையில்) ஞானோபதேசம் செய்திருக்கிறார். சிவயோகமாமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் ஆகியோர் மற்ற நால்வராவார். இந்த உண்மையை திருமந்திரம் 68-ம் பாடலில்
“நந்தி அருள் பெற்ற நாதரை நாடினின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மருமாமே.”
என்று விளக்கியுள்ளார். சிவபெருமானின் குரு மூர்த்தமான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பதஞ்சலி முனிவருக்கு
“பாரப்பாபதஞ்சலியே சொல்லக்கேளாய்
பாங்கான முப்பூவை அறியவேணும்
சேரப்பா சுழி முனையில் மனக்கண் நாட்டி
செயலான அம்பரத்தைக் காணவேணும்
நாரப்பா நரம்புதசைத் தோலாம்வீட்டை
நம்பாதே என்மகனே நடுவைப்பாரு
காரப்பா திருகோண ஆட்சிவீட்டை
கைமுதலாய் சிலேத்துமத்தைக் கழற்றிப்பாரே.”
என்று உபதேசம் செய்துள்ளார். அவரே ஞானசூத்திரம் பாடல்கள் 10ல் இது 7வது பாடல். இந்த ஞான சூத்திரம் தவிர திருமந்திரம் 1500 என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார்.
ஆதிசிவனே இந்த தட்சிணாமூர்த்தி என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இவரைப் பற்றி ‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில்,
“ஆதியில் தட்சிணாமூர்த்தியப்பா
அப்பனே அவர்மரபு ஏனெறாக்கால்
நீதியாம் கவுண்டன்என்ற மரபே யாகும்
நிஷ்களங்கம் ஆனதொரு மூர்த்தி என்பார்”
போ. ஏ: 5716
“கோனான தட்சிணா மூர்த்தியப்பா
குவலயத்தில் வெகுகாலம் இருந்த சித்து

மானான வயததுவும் ஏனெறாக்கால்
மகத்தான ஆயிரத்தி சொச்சமப்பா
பானான படிஏழும் கடலும் சுத்தி
பாரினிலே உழன்றதொரு சித்துதானே”
போ. ஏ: 5807
“காணவே தட்சிணாமூர்த்தியாரும்
காசியினில் திருமந்திரம் பாடினோர்தான்”
“ஆணவங்கள் தான் ஒடுங்கி சித்துதானும்
அன்பான காசிபதி சென்றிட்டாரே.”
போ. ஏ: 5808
“சென்றாரே நர்மதா நதியின் பக்கம்
சிறப்புடனே தட்சிணாமூர்த்தி நாயன்
குன்றான கரையோரம் மண்டபந்தான்
கொற்றவனார் சமாதிமுகம் சென்றுமல்லலோ
வென்றிடவே ஒருயுகமாம் அறுபதாண்டு
உத்தமனார் தானிருந்த சித்துதானே”
போ. ஏ: 5809
இதன் பொருள்
‘தட்சிணாமூர்த்தி என்பர் ஒரு மகாசித்தர். இவர் கவுண்டர் குலத்தில் பிறந்தவர். களங்கம் சிறிதுமற்ற குருமூர்த்தி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர். ஏழு கடல்களாலும் சூழப்பட்ட உலகம் முழுவதும் சுற்றியவர். திருமந்திரம் என்ற நூலைப் பாடியவர். இவர் காசிவரை சென்று திரும்பும்; வழயில் நர்மதை நதிக்கரையில் ஒரு மலைக்குன்றின் அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் சமாதி பூண்டு ஒரு யுகம் அறுபதாண்டு காலமாக ஜீவன் முக்தராக வாழ்ந்து வருகிறார் என்று போகர் கூறுகிறார்.
இவரைப்பற்றி அகத்திய முனிவரும்
“கேளப்பா புலத்தியரே மச்சகேந்திரா
கெடியான மலை வளமாம் தட்சிணாயன்
சூளப்பா நதியாறு குண்ணுமுண்டு
சுந்தரரே வில்விசய பூபா கேண்மோ
நாளப்பா வரைகோடி காலந்தானும்
நானிலத்தில் பிரளயங்கள் கண்டசித்து
பாரப்பா போகாமல் ஸ்தூலந்தன்னை
பார்தனிலே மறைத்து வைத்த சித்துவாமே.”
என்று பாடியுள்ளார். போகர் கூற்றும் அகத்தியர் கூற்றும் ஒன்றாகவே இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே குரு தட்சிணாமூர்த்தி இப்போது நம் போன்ற சாதாரணமான இல்லறத்தார்க்கு, திருமூலர், அகத்தியர் போன்ற மகாசித்தர்களும் அடைய முடியாத பேரின்ப வாழ்வை தவம், யோகம் எதுவும் செய்யாமலே அறம் வழுவா பக்தி மூலம் அடைவதற்குரிய எளிய வழியைக் காட்டிவரும் குருவாக திருவாரூர் வன்மீகபுரத்தில் ஜீவசமாதி பூண்டிருந்து அருளாட்சி செய்து வருகிறார் .
