பெண்களுக்காக விரிக்கப்படும் வலை!

0
Full Page

சமூக வலைதளங்கள் பெரும்பாலான மற்ற துறைகளுக்குத் தகவல் வங்கிகளாகச் செயல்படுகின்றன. பல துறைகளின் போக்குகளைச் சமூக வலைதளங்களே தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகள், தேவைகள், நோக்கங்கள், தனிப்பட்ட உணர்வுகள் என அனைத்துமே வியாபாரமாக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு பெண் தனது முகநூல் கணக்கைத் திறக்கும்போது, தனது முகநூல் பக்கத்தில் காட்டப்படும் சேலை விளம்பரம் ஒன்றை கிளிக் செய்து பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். உடனடியாக, அவரது மொபைல் எண்ணுக்கு ஆன்லைனில் சேலைகள் விற்பனை செய்யும் வலைதளங்களிலிருந்து குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வரத் துவங்கிவிடும். பல சலுகைகள் பற்றிய அப்டேட்களும் வந்த வண்ணமிருக்கும். ஒரு சமூக வலைதளத்தில் அந்தப் பெண் பார்த்த விளம்பரத்தின் மூலம் அவரது விருப்பம் அறியப்பட்டு, அதன் அடிப்படையில் பெறப்படும் டேட்டா, அந்த விளம்பரம் சார்ந்த ஏனைய துறைகளுக்கு அனுப்பப்படுகிறது. மீண்டும் அந்தத் தனிநபரின் சமூக வலைதளக் கணக்குகள் மூலமாகவே ஆன்லைன் வியாபாரத் தளங்கள் நுகர்வோரை நேரடியாக அணுகவும் முடிகிறது.

 

பொழுதுபோக்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்கள் தரும் டேட்டாவை நம்பியே முதலீடுகள் செய்யப்படுகின்றன. அண்மையில் அமெரிக்காவின் நீல்சன் கம்பெனி நடத்திய ஆய்வு ஒன்றில் சமூக வலைதளங்கள் என்டர்டெயின்மென்ட் மீடியாவை அதிகமாகப் பாதிப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆண்களைவிடப் பெண்களே சமூக வலைதளங்களில் அதிகக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதனால்தான் பெண்களை கவரும் வகையில், பெண் சூப்பர் ஹீரோக்களைக் கொண்ட பெரும் பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளிவருவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸின் கேப்டன் மார்வெல், டிசி காமிக்ஸின் வொண்டர் வுமன் போன்ற திரைப்படங்களிலிருந்து, கேம் ஆப் த்ரோன்ஸ் போன்ற பெரிய பட்ஜெட் டிவி சீரியல்கள் வரை அனைத்திலும் பெண்களே முன்னிலை கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். 1960களில் பெரும்பாலும் ஆண் மையக் கருத்துகளை அதிகமாகப் பரப்பிவந்த பொழுது போக்கு ஊடகங்கள் இன்று பெண் மையச் சிந்தனைகளுக்கு அதிகமாக இடம் கொடுப்பதன் பின்னணியில் சமூக வலைதளங்களின் பங்கு அளப்பரியது.

 

Half page

சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளைப் பதிவு செய்வது ஒரு வகையில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது. இதுவே பெண்கள் அதிகமாக ஆன்லைன் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வதற்கும் காரணமாகும். தனி மனிதரின் விருப்பங்களைப் பொறுத்து சமூக வலைதளங்கள் அவர்களை டேஸ்ட் கம்யூனிட்டிஸ் (taste communities) அதாவது ஒருமித்த விருப்பமுடைய குழுக்களாகப் பிரித்துவிடுகின்றன. சமூக வலைதளங்களின் அடிப்படைக் கட்டமைப்பே அதில் இணைந்திருப்பவர்கள் நேரில் சந்தித்துப் பேசிவிடக் கூடாது என்பதுதான். அவர்கள் நேரில் சந்தித்து பேசும்போது அவர்களுடைய சமூக வலைதளப் பயன்பாடு பெரும்பாலும் குறைந்துவிட வாய்ப்பிருப்பதால், அவர்களுக்குக் காட்டப்படும் நட்புக்கான பரிந்துரைகளில்கூட உள்ளூர்வாசிகள் இல்லாதவாறு சமூக வலைதளங்கள் பார்த்துக்கொள்கின்றன.

 

இவ்வாறு பிரிக்கப்படும் டேஸ்ட் கம்யூனிட்டிஸில் உள்ள ஆண்களை சமூக வலைதளங்களில் சந்திக்க நேரும்போது அவர்கள் பால் இயல்பிலேயே பெண்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகிறது. இது நாளடைவில் காதலாக வளர்ந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது. இவ்வாறான ரேண்டம் ரிலேஷன்ஷிப்களில் பெரும்பாலும் இரு பாலரிடமுமே உண்மை இல்லாததால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, ஓர் ஆணை நேரில் சந்தித்துப் பேசும்போது ஏற்படும் உளவியல் ரீதியான தடைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பேசும்போது ஏற்படுவதில்லை என்பதால் அவர்கள் சமூக வலைதள உரையாடல்களைச் சற்று சௌகரியமானதாகவும் நினைக்கிறார்கள். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் வெகு தூரத்தில் இருப்பதால் உறவு இன்னும் விரைவாக வளர்ந்துவிடுகிறது. இதன் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் வீடியோக்களும் குறுஞ்செய்திகளும் பிற்காலத்தில் பெண்களுடைய வாழ்க்கையைப் பாதிப்பதாகவே பெரும்பாலும் அமைகின்றன.

 

பெண்களின் விருப்பங்களைச் சமூகம் அறிந்து வைத்திருப்பது அவசியம்தான். அதைப் பொதுவெளியில் சொல்வதற்கான உரிமைக்காகப் பெண்களும் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள். இருந்தாலும் தனக்கென வைத்துக்கொள்ள வேண்டிய தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அவ்வாறு பகிர்ந்துகொள்ளும் பட்சத்தில் அது தங்கள் பாதுகாப்பைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் கடமையும் தங்களுக்கு இருக்கிறது என்பதையும் பெண்கள் உணர வேண்டும்.
– நவீனா

Quarter page

Leave A Reply

Your email address will not be published.