அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்

0
Business trichy

திருச்சியில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தினகரன், “சுயநல நிர்வாகிகள்தான் வேறு கட்சிகளுக்கு செல்வர்” என்று சாடியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அமமுக தோல்வியடைந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து ஆராய அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். அந்த வகையில் திருச்சி வயலூர் மணிமுத்து செல்வம் திருமண மண்டபத்தில் ஜூன் 22 திருச்சி வடக்கு, தெற்கு மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்குபெற வந்த தினகரனுக்கு, அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய டிடிவி தினகரன், “தேர்தலில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது உண்மைதான். தோல்விக்கான உண்மையான காரணம் என்னவென தெரிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் பணிகளை துவங்கிவிட்டேன். அமமுகவை லெட்டர் பேடு கட்சி என்கிறார்கள். ஆனால், இதே லெட்டர் பேடு கட்சியில் இருந்து யாராவது வருவார்களா என்று வீடுவீடாகச் சென்று அழைக்கிறார்கள்.

 

Kavi furniture
MDMK

அண்ணா கட்சி ஆரம்பித்தபோது அவருடன் இருந்த ஈ.வி.கே.சம்பத்தே அவரை விட்டுப் பிரிந்து சென்றார். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த சிறிது காலத்தில் அவருடன் இருந்த கோவை செழியன், போன்றோர் வெளியேறினார். சத்தியவாணி முத்து, நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் என எத்தனையோ பேர் சென்றார்கள். இந்த இயக்கத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் இடம்பெயர்வார்கள். ஏனெனில் சுயநலத்துடன் சிலர் இருப்பார்கள். ஆனால் அடிமட்டத் தொண்டர்களும் நிர்வாகிகளும் எப்போதும் இயக்கத்தை விட்டுச் செல்லமாட்டார்கள்” என்றார்.

 

தொடர்ந்தவர், “தற்போது எனக்கு 55 வயது முடிந்திருக்கிறது. இன்னும் இருபது ஆண்டுகாலம் உழைப்பதற்கு என்னிடம் மன தைரியமும் உடல் தைரியமும் உள்ளது. சிலர் வேறு கட்சிக்கு சென்றார்கள் என்றெல்லாம் இருக்கத்தான் செய்யும். அதனை பெரிதுபடுத்திக்கொள்ளாமல் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் மற்றும் வேலூர் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகுங்கள்” என்றும் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்
அதிமுகவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படும் தங்க தமிழ்ச்செல்வனை மறைமுகமாக விமர்சித்த தினகரன், “சிலர் குழப்பி குழப்பி பேசுகிறார்கள். அவர்கள் குழம்பிப்போய் மற்றவர்களை குழப்புகிறார்கள். அவர்களிடத்தில், இந்த கட்சி வேண்டும் என்று நினைத்தால் இருங்கள், இல்லையெனில் வேலையை பார்த்துக்கொண்டு செல்லுங்கள் என்றே கூறிவிட்டேன்.
அவர் போனார், அந்த ஜாம்பவான் தாண்டிக் குதித்தார் என்றெல்லாம் செய்திகள் வரும். எனவே அமமுகவிலிருந்து வேறு கட்சிகளுக்கு செல்பவர்களைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

 

 

குழம்பியிருப்பவர்கள்தான் அதிமுகவுக்கு செல்வார்கள். அதிமுகவை அமமுகவில் இணைப்பேன் என்று சொன்னதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அதிமுகவுக்கும் நமக்கும் என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
வருங்காலத்தில் நமக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. அதனை நோக்கி பயணிக்க வேண்டும். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக அமமுக தொடர்ந்து பாடுபடும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.