படிக்கும் பொழுதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் அரசுப் பள்ளி மாணவி!

0
Business trichy

படிக்கும் பொழுதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் அரசுப் பள்ளி மாணவி!

 

 

படிக்கும் பொழுதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் திருவரங்குளம் ஒன்றியம் ஈட்டித்தெரு அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி க. இயல் ஊடக வானில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

 

ஊடகத்துறையில் பெண்களின் எண்ணிக்கை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தான் உள்ளது. இந்த சூழலில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு இத்துறையில் ஆர்வம் என்றால் பாராட்டியே ஆக வேண்டும். ஊடகத்துறையில் செய்தி சேகரிப்பவர்களுக்கு வடிவமைக்க தெரியாது. வடிவமைக்க தெரிந்தவர்களுக்கு செய்தி சேகரிக்க தெரியாது. இரண்டும் தெரிந்தவர்களுக்கு நாளிதழ் ஆசிரியர் ஆகும் வாய்ப்பு குறைவு. இவை அத்தனையும் தெரிந்தாலும் பத்திரிக்கை முதலாளி ஆவது சிரமம். பள்ளி மாணவப்பருத்திலே தனி இதழ்கள் நடத்தியவர்கள் பலர் இருந்தாலும் அதில் முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் தற்கால அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கோடைக்கால விடுமுறையில் நாளிதழ் வடிவமைப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியினைப் பெற்று அப்பயிற்சியின் மூலம் நல்ல பத்திரிக்கை என்ற மாத இதழைத் தானாகவே வடிவமைத்து தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் கல்வித்துறை அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்று இருக்கின்றார் அரசுப்பள்ளி மாணவி க.இயல்.

 

மாணவி க.இயல் வடிவமைத்த நல்ல பத்திரிக்கையை வெளியிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியதாவது:

 

Full Page

ஓர் அரசுப் பள்ளி மாணவி பத்திரிக்கையை வடிவமைப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரிய செயல் ஆகும். நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது என்றார். பின்னர் மாணவி இயலிடம் நீ எவ்வாறு உனது பெற்றோரை பார்த்து  கற்றுக்கொண்டாயோ அதை போல் உன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கும் நீ கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

 

இது குறித்து மாணவி சு.க.இயல் பேசும் போது…

 

சிறுவயதில் இருந்து அப்பா செய்தியை உருவாக்கும் பொழுதும் அச்செய்தி வடிவமைக்கும் பொழுதும் எனக்கும் அப்பா போல் வர வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அப்பா இந்த துறையில் இல்லை என்றால் எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது எனக்கு நாளிதழ் துறையில் ஆர்வம் இருப்பதால்  சிந்திக்கும் திறன் , கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன் அதிகமாக உள்ளதாக உணர்கிறேன். எனக்கான ஆர்வத்தை அப்பாவிடம் முதலில் கூறியவுடன் என் அப்பா கோடைக்கால விடுமுறையில் செய்தி தயாரிக்கும் வழிமுறைகள் குறித்தும் அச்செய்தியினை வடிவமைப்பது குறித்தும் கற்றுக் கொடுத்தார். அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட நான் அவரது புலன எண் (Whatsapp), மின்னஞ்சல் முகவரிக்கு வரும் செய்திகளை எடுத்து அச்சடிக்கவும், வடிவமைக்கவும் கற்றுக் கொண்டேன். பின்னர் நான் வடிவமைத்த நாளிதழுக்கு நல்ல பத்திரிக்கை எனப் பெயர் வைத்தேன். எனது ஆசை எல்லாம் பிற்காலத்தில்  ஒரு பத்திரிக்கையாளராக வரவேண்டும். பத்திரிக்கையாளர் ஆகி நல்ல செய்திகளை மக்களுக்குத் தர வேண்டும். பொதுமக்களும் கடையில் சென்று நல்ல பத்திரிக்கையைக் கேட்டு வாங்கிப் படிக்கவேண்டும் என்பதேயாகும்.

தற்பொழுது நான்  பள்ளியில்  படிப்பதால் என்னால்  நாளிதழ் வெளியிட இயலாது. எனவே நான் படிக்கும் பள்ளியில்   நடக்கும் நல்ல செய்திகள் மற்றும் நமது மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வைத்து மாதமாதம் நல்ல பத்திரிக்கையை வெளியிட்டு தலைமை ஆசிரியரிடம் வழங்குவேன். இப்போதிருக்கும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி முகநூல் மற்றும் புலனம் போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கு நல்ல பத்திரிகையின் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் திட்டம் வைத்திருக்கிறேன்.

 

இன்னும் அறிவியல் வளர்ச்சிகள் வரும்பொழுது அதையும் துரிதமாகக் கற்றுக்கொண்டு புதிய முயற்சிகள் மேற்கொள்வேன். தற்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் என்னை நேரில் அழைத்து பாராட்டியதையும் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் அவர்கள் என் பள்ளிக்கு வந்து என்னை நேரில் பாராட்டி பரிசு வழங்கியதை நினைக்கும் பொழுதும் என் மனம் மகிழ்வாக உள்ளது என்றார். நிகழ்வின் போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) இரா.சிவக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி கல்வி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, கல்வித் தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி தலைமையாசிரியர் கோவிந்தம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Half page

Leave A Reply

Your email address will not be published.