அடிப்படை வசதி இல்லாத திருப்பைஞ்சீலி வாரச்சந்தை

0
1

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பைஞ்சீலி. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை நீக்கும் கல்வாழை பரிகார ஸ்தலமாகவும், எமனுக்கென்று தனி சன்னதி உள்ள ஸ்தலமாகவும் விளங்கும் பிரசித்தி பெற்ற நீலி வனநாதர் கோவில் இவ்வூரில் அமைந்துள்ளது. இப்படி சிறப்பு பெற்ற இக்கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று வாரச்சந்தை கூடுவது வழக்கம். அன்று திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் விற்பனைக்காக காய்கள், பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ரெடிமேட் துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

திருப்பைஞ்சீலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கவுண்டம்பட்டி, மூவராயன்பாளையம், வால்மால் பாளையம், ஈச்சம்பட்டி, தீராம்பாளையம், தில்லாம்பட்டி, காளவாய் பட்டி, காட்டுக்குளம், உடையான்பட்டி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து விவசாயிகள் தங்களின் நிலங்களில் விளைந்த பொருட்களை விற்பனை செய்வதற்காகவும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், இதர பொருட்களை வாங்குவதற்காகவும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

2

அடிப்படை வசதிகள்

மரங்கள் அடர்ந்த சூழ்நிலையில் கூடும் இந்த இடத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதியோ, மின்விளக்கு வசதியோ எதுவுமே கிடையாது. மழைக்காலங்களிலும், வெயில்காலங்களிலும் பாதுகாப்புடன் வியாபாரம் செய்வதற்கு மேற்கூரை (கொட்டகை) வசதி கூட கிடையாது.

4

மதியம் 3 மணிக்கு மேல் களை கட்டும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. ஆனால் இரவு நேரங்களில் மின் வசதி இல்லாமல் வியாபாரிகள் சிறிய அளவிலான ஜெனரேட்டர்கள் மூலமும், மண்எண்ணெய் விளக்குகளை பயன்படுத்தியும் வியாபாரம் செய்து வருகிறார்கள். சந்தை முழுவதும் மின்வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

நடவடிக்கை

மேலும் வெயில் காலங்களில் குடிப்பதற்கு கூட தண்ணீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது. இங்கு நடைபெறும் சந்தை உள்ள இடம் நீலிவனநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் ஒவ்வொரு வாரமும் வியாபாரிகளிடம் நிர்வாகத்தின் சார்பில் சிலர் கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். பல ஆண்டு காலமாக கோவில் நிர்வாகம் சார்பாக கட்டணம் வசூல் செய்தும் எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும், இதற்கு முன்பு இருந்த அறங்காவலர் குழுவிடமும் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சந்தை கூடும் நாளன்று அதிகளவில் மக்கள் கூடுவதால் இருளை பயன்படுத்திக்கொண்டு திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே மக்களின் உணர்வுகளை மதித்து வாரச்சந்தை பகுதிக்கு மின் விளக்கு வசதியும், குடிநீர் வசதியும், மேற்கூரை வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.