நிலத்தடி நீர்மட்டம் 17.6 மீ குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு

0
1 full

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களின் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரித்தின் மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு முன்னிலை வகித்தார்.

ஆய்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சி.என்.மகேஸ்வரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2 full

சென்னை தவிர தமிழகத்தில் உள்ள 4 கோடியே 23 லட்சம் மக்களுக்கு தினமும் தேவையான குடிநீர் 2,146 எம்.எல்.டி (ஒரு எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர்) ஆகும். இதில் தற்போது 1,800 எம்.எல்.டி. குடிநீர் தான் வழங்கப்படுகிறது. காவிரி, தாமிரபரணி, வைகை ஆகிய ஆற்றுப்படுகைகளில் குடிநீர் ஆதாரம் 95 சதவீதம் அளவில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீராதாரம் 17.6 மீட்டர் ஆழத்திற்கு கீழ் சென்று விட்டது. ஒரு சொட்டு தண்ணீரை பார்க்க வேண்டுமானால் 17.6 மீட்டர் அளவுக்கு தோண்ட வேண்டியது உள்ளது. இதுவும், பருவமழை பொய்த்து விட்டதும் தான் குடிநீர் பிரச்சினைக்கு காரணமாகும்.

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.27 கோடி மதிப்பீட்டில் 325 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் 177 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 99 கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ. 244 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 556 கூட்டு குடிநீர் திட்டங்களின் செயல்களை பராமரிக்க 218 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் தொடர்பாக குறைகளை நிவர்த்தி செய்ய தலைமை அலுவலகத்தின் 94458 02145 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வரலாற்றில் முதன் முறையாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. இதற்காக 17 பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் இரவு பகலாக வேலை செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு வார காலத்தில் இந்த பணிகள் முடிவடைந்து குடிநீர் வழங்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.