‘வெண்புள்ளி இருப்பவர்கள் புள்ளிமான்களுக்கு சமமானவர்கள் !

0
1 full

திருச்சியில், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் – இந்தியா அமைப்பின் சார்பில், வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வு மாநாடு நடந்துவருகிறது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் ஜுப்ளி அரங்கத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த அமைப்பின் செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெறும் மாநாடு, காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்த மாநாட்டை திருச்சி தோல் நோய் சிகிச்சை நிபுணர், மருத்துவர் பாலசுப்ரமணியம் மற்றும் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு இயல்பான வகையில் பிறந்துள்ள குழந்தை சகிதமாக மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.
அதையடுத்து கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் பல்வேறு தலைப்புகளில் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள ஏராளமான மருத்துவ நிபுணர்கள், வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வு உரை நிகழ்த்திவருகிறார்கள்.இன்று மாலை வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியரான டாக்டர் ஏ.ஜி.எஸ். பிரவீன், “உலக அளவில் பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன், நடிகர் அமிதாப் பச்சன், பிரபல மாடல் அழகி வின்னி ஹார்லோ உள்ளிட்ட பலர், வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மன தைரியத்தால் எதிர்கொண்ட இவர்கள் சாதித்துள்ளனர்.
வழக்கமாக, எல்லோருக்கும் ஆறுவகையான தோல்கள் உள்ளன. மனிதரின் எதிர்ப்புத் தன்மையைப் பொறுத்து தோல்கள் மாறுபடுகின்றன.முடி நரைப்பதைப்போல் தோல் மாற்றம் ஏற்படும். இது, பால்வினை நோயல்ல. வெண்புள்ளி இருப்பவர்கள், புள்ளி மான்களுக்குச் சமம். அவர்கள், உடலில் உள்ள புள்ளிகள்தான் அவர்களுக்கு அழகு சேர்க்கும். உலகில் 50 மில்லியன் நபர்களுக்கு வெண்புள்ளி நோய் பாதிப்பு உள்ளது என ஆய்வில் தெரியவருகிறது.வெண்புள்ளி இருப்பதனால், யாரையும் புறக்கணிக்கக் கூடாது. என்னதான் பேசினாலும், வெண்புள்ளி உள்ளவர்கள் திருமண ஏற்பாடுகள் செய்யும்போது, மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். வெண்புள்ளி நோய் புறக்கணிப்பால் நம்மை அனுதினமும் சாகடிக்கிறார்கள்.
வெண்புள்ளி நோயை வெளிநாடுகளில் வெறும் கலர் மாற்றம் என விட்டுவிடுகிறார்கள். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் தான் வெண்குஷ்டம் என்பது போன்ற பார்வை இன்னும் மாறாமல் உள்ளது. அதிகமாக, சுற்றுச்சூழல் பேரழிவுகளால் சென்னை போன்ற பெருநகரங்களில் மனிதர்களின் தோல்களில் மாற்றம் ஏற்படுகிறது.
வெண்புள்ளி பாதிப்பு நோய்களுக்கு வைத்தியம் அதிகம் தேவையில்லை. சிறிய அளவில் இருந்தால், அது மேலும் பரவாமல் இருப்பதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து இதற்கு மருத்துவ ஆலோசனையுடன் சிறிய விஷயங்களைச் செய்தால், அதிகம் பரவாமல் தடுக்கலாம். வெண்புள்ளி இருப்பதாலேயே அவரைப் புறக்கணித்துவிடக் கூடாது”என முடித்தார்.
தொடர்ந்து, வெண்புள்ளி நோய்களால் பாதிக்கப்பட்டு, பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, “இது பரம்பரை நோய் அல்ல, தொற்றுநோய் அல்ல. வெண்புள்ளி என்பதைப் பலரும் மூட நம்பிக்கையாகவும் முன் வினையாகவும் நினைக்கிறார்கள். இப்படியான அறியாமையைப் போக்குவதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது” எனக் கூறினார்.
அதன்பிறகு பேசிய அச்சங்கத்தின் செயலாளர் மருத்துவர் உமாபதி, ” வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மத்திய ஆராய்ச்சி நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெரும்பாலும் திருமண நேரங்களில் மிகப் பெரிய பிரச்னை ஏற்படுகிறது. அதனால், இதுவரை எங்கள் அமைப்பு சார்பில் 387 திருமணங்கள் செய்து வைத்திருக்கிறோம். இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு, வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். வெண்புள்ளி என்பதை வெண்குஷ்டம் என அழைத்தல் கூடாது. வெண்புள்ளி என்றே அழைக்க வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது” என்றார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.