அறிவோம் தொல்லியல்-19 பயணங்கள் முடிவதில்லை…

0
1

அசோகன் பிராமியே இந்திய அளவில் பழமையான எழுத்து வடிவம் என்று ஆரம்பகால வரலாற்று அறிஞர்களல் கருதப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. அசோகரின் கல்வெட்டுகள் தமிழகம் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கிடைத்தது, அவர்களின் கருத்துக்கு வலுசேர்த்தது. அசோகரின் கல்வெட்டுகள் அனைத்தும்  இவர் பெயர் தேவநாம் பிய பியதசி (இறைவனுக்கு பிரியமானவன்) என்றே வருகிறது!  ஆரம்பகட்டத்தில் இந்த மன்னன் யாரென ஆய்வாளர்களுக்குள் குழப்பம் ஏற்ப்பட்டது. காரணம் தமிழகம் தவிர அனைத்து மாகாணங்களிலும் இப்பெயர் கிடைத்தது.

கர்நாடக மாநிலம் மஸ்கியில் கிடைத்த ஓர் பாறைக் கல்வெட்டில், தேவநாம் பிய பியதசி அசோக எனக் கூறியிருந்ததால். இந்த மன்னன் அசோகனே என்று  ஒருவாறு இந்த சிக்கல் முடிவிற்கு வந்தது.

 

கிர்னாரில்(குஜராத்) கிடைத்த அசோகரின் கல்வெட்டில் தனது ஆட்சிக்கு உட்படாத அண்டைநாடுகளாக, சேர, சோழ, பாண்டிய, ஸத்தியபுரர்களை குறிப்பிடுகிறார். அகண்ட பாரத்தையும், பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் முதலிய பகுதிகளை ஆண்டாலும், அவர்களுக்கு கட்டுப்படாத அரசாக மூவேந்தர்கள் இருந்துள்ளனர். ஸத்தியபுத்திரர் என்போர் யார் என்று விவாதத்திற்குரியதாய் இருந்தது. பின்னர் கண்டறியப்பட்ட தமிழி கல்வெட்டொன்று சங்ககால வேளிரான அதியமான்கள் தான் ஸத்தியபுத்திரர் என்று குழப்பத்தை தீர்த்து வைத்தது.

 

4

அசோகரின் புகழ்பெற்ற அந்த கல்வெட்டை காண்போம்.

 

  1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
  2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
  3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
  4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
  5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
  6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
  7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
  8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்

 

கல்வெட்டு செய்தி:

அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி அண்டை நாடுகளான சேர, சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர், யோன அரசரான அன்டியோகஸ் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகைச் சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும் பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் பரிபோக்யமாக, சுபமாக வாழவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.

 

இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் (கி.மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் சிறப்புற்று வாழ்ந்தது விளங்கும்.

தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி தமிழ் அரசர்களின் சிற்றரசர்காளாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவு.

 

அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

தமிழி எழுத்துகள் :

 

ஒன்றுபட்ட இந்தியாவில் அசோகனே முதன்முதலாக எழுத்துவடிவத்தை புகுத்தினான், என்ற கருத்தை பொய்ப்பிக்கும் வண்ணம் அவனுக்கு முந்தைய கல்வெட்டுகள் நம் தமிழகத்தில் கிடைத்து, புதிய கோணத்தில் வரலாற்றை பார்க்க வைத்தது நம் தமிழி எழுத்துகள்.

புலிமான்கோம்பை நடுகல்:

இதுகாறும் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் தொன்மையான கல்வெட்டாக இதனைக் கூறலாம்.

தேனி மாவட்டம் வைகையாற்றின் தென்கரையில் ஆண்டிப்பட்டிக்கும், வத்தலகுண்டிற்கும் நடுவே அமைந்தது இவ்வூர்.

தமிழ்ப்பல்கலை கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளரான திரு.யதிஸ்குமார் மற்றும் செல்வகுமார் ஆகியோர்களால் 2006ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. இவ்வூரைச்சுற்றி இன்றும் சங்ககால வாழ்விடபகுதி(Habitation sites) எச்சம் பரவி காணப்படுகிறது!

இங்கு மொத்தம் நான்கு நடுகல் கல்வெட்டு கிடைத்துள்ளது. இவற்றின் காலம் கி.மு4 ம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டுள்ளது.

நடுகல் குறித்து சங்ககால இலக்கியங்கள் நிறைய கூறுகிறது!

இக்கல்வெட்டின் விவரத்தை காணும் முன்பு நடுகல் வழிபாட்டின் முக்கியத்துவம் முதலில் காண்போம்.

நாட்டிற்காக ஊரிற்காகவோ, அல்லது தன் குடும்பத்திற்காகவோ, பெருவீரம் காட்டி இறப்போரை, மக்கள் மறவாது வணங்கினர். அவ்வாறு இறந்தோர் நினைவாய் கல்லெடுத்து வணங்கும் வழக்கத்தை நம் முன்னோர் போற்றிவந்துள்ளதற்கு பல சான்றுகள் நம்மிடையே உண்டு. தற்காலம் வரையிலுமே தம் குடும்பத்தில் எவரேனும் இறந்தால், அவர் நினைவாய் நீத்தார்கடன் செலுத்தும்போது கல்லை வைத்து, அதனைச்சுற்றி அவர் உடுத்திய உடை, அவருக்கு பிடித்த உணவுப்பொருட்களை படைக்கும் வழக்கம் பெருமளவில் காணப்படுகிறது!  அதற்கு “கல்லெடுத்தல்” என்று பெயர்.

 

தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் இவ்வகை மரபை ஆறு வகை நிலைகளாய் பிரிக்கிறார்,

 

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்- சீர்த்தரு சிறப்பின் பெரும்படை வாழ்தல்”

 

இந்த ஆறுநிலை கூறுகளும் நடுகல் குறித்து வருபவையே,

இதிலுள்ள பெரும்படையும், வாழ்த்தலும் நடுகல் வழிபாட்டை குறிப்பதாகும்.

 

2

இதனடிப்படையிலேயே நடுகற்கள் எழுப்பியுள்ளனர்.

முதலில் கல்லெடுக்கும் நிலையில் இருந்து படிப்படியாய் வழிபடும் நிலைக்கு நடுகல் வழிபாடு உயருகிறது.

 

நடுகல் எடுக்கும் முறை:

 

தொல்காப்பியம் கூறும் ஆறு கூறுகளை ஆராய்ந்தால், அதில் நடுகல் எடுக்கும் முறைகுறித்து வருவதை உணரலாம்.

1.(காட்சி)வீரனுக்கு நடுகல் எடுக்க விரும்புவோர், நல்லவகையான கல்லைத்தேடி செல்வர்.

2.(கால்கோள்) கல்லைத்தேடி தேர்ந்தெடுத்தவுடன், மாலையிட்டு, மதுவுமிட்டு அக்கல்லை கொண்டுவருதல். கல்லைக் கொண்டுவரும்பொழுது  பறையிசை ஒலிக்க எடுத்து வருதல்.

3.(நீர்ப்படை) கல்லை கொண்டுவந்த பின், அதனை நீர்நிலைப்பகுதியில் கிடத்தி அக்கல்லினை முதலில் குளிர்வித்தல், கல்லின் வெம்மை தனிந்தபின், அக்கல்லில் இறந்தவரின் பெயர், குலம், என்ன காரணமாய் இறந்தார் என்பதனை எழுத்தாக வெட்டுதல்.

4.(நடுதல்) கல்லை வடிவுபடுத்தி, எழுத்து பொறித்தபின் செம்மறியாடு பலியிட்டு, மலரும் மதுவும், மயிற்பீலியும் அலங்கரிக்க அக்கல்லை நடுதல்.

5.(பெரும்படை) நட்டக்கல்லிற்கு கோவில் எழுப்பி கூரை அமைத்து வழிபடுதல்.

6.(வாழ்தல்)இறந்தவர் வழியினரும், நட்டவரும் நடுகல்லை வணங்குதல்.

 

பல சங்க இலக்கிய நூல்களும் நடுகல் வழிபாட்டை எடுத்துயியம்புகின்றன.

பெருங்கற்கால சின்னங்கள் பலவற்றிலும் இவ்வகை கூறுகள் காணப்படுகிறது!

 

அகநானூற்று பாடலில் ஒன்றில்

“உயர்பதுக்கை” என்ற சொல்லைகுறிக்கிறது. பதுக்கையானது உயரமாக இருப்பதனால் இவ்வாறு அழைத்தனர்.

 

“சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்

உயர்பதுக்கை இவர்ந்த ததர்கொடி அதிரல்

நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்

கரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயவின்”

 

ஆறலைகள்வர் வில்லில் கோர்த்து எய் அம்பினால் வழிப்போக்கர் இறந்துபட்டனர். அவர்தம் உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களில் காட்டுமல்லிகை ஏறிப்படரும். அத்தகைய நடுகல்லாகிய தெய்வத்திற்கு நாட்பலியிட்டு வழிபடுவர்.

இப்பாடல் உயர்ந்தபெரும் பதுக்கையை கூறுகிறது!

 

மற்றொரு பாடல்

“இருங்கேழ் இரலை சேக்கும்

பரல் உயர்பதுக்கை

கடுங்கண் மழவர் களவு உழவு”

என கூறுகிறது!

 

இவ்வுயர்பதுக்கையிடையே மறைந்து அஞ்சாமையுடைய மழநாட்டார் உழவுபோல் களவுசெய்ய இடமாய் அமைந்தது என தெரிவிக்கிறது.

 

படத்தில் காணப்படும் பதுக்கை இவ்வகை உயர்பதுக்கை வகையைச் சார்ந்ததே.

 

வரும் வாரம் புலிமான்கோம்பை நடுகல்லின் முழு விவரத்தை காண்போம்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்