ஆதிமகள் 20

முன்கதை சுருக்கம்:
சண்முகநாதன், ஜானகி அம்மாள் தம்பதியினரின் ஒரே மகள் காயத்ரி, தனது கல்லூரிப்படிப்பை காரணமின்றி பாதியிலேயே நிறுத்தி விடுகிறாள். படிப்பை நிறுத்திய காயத்ரிக்கு திருமணம் செய்து வைக்க அவளது பெற்றோர்கள் முடிவு செய்து, மாப்பிள்ளை பார்க்க, காயத்ரியும் திருமணத்திற்கு சம்மதிக்க, பல மாப்பிள்ளைகள் பெண்பார்த்து விட்டு செல்கிறார்கள். ஆனால், காயத்ரிகோ யாரையும் பிடிக்காமல்போகிறது. இந்த நிலையில், கோகுலகிருஷ்ணன் என்பவரின் மூத்த தாரத்தின் மகன் கரண் மீது காயத்ரி ஒரு தலைபட்சமாக காதல் கொள்ள ‘’அதே சமயம் கரணுக்குள்ளும் காயத்ரியின் அழகும், அறிவும் ஆழ்ந்த பாதிப்பை அவன் மனதுக்குள் ஏற்படுத்த கரணும் தடுமாறுகிறான். இருவரும் ஒருவருக்கொருவர் தனது காதலை சொல்லாத நிலையில்’’… இனி,
காயத்ரியுடன் பேச வேண்டும் என ஜானகி அம்மாள், சண்முகநாதனை உட்கார சொன்ன வார்த்தையின் வெளிப்பாட்டில் ஒரு அதிகாரத்தோரணை இருந்ததை பார்த்த சண்முகநாதன், ‘’காயத்ரி ஏதோ தவறு செய்து விட்டாள் போல் இருக்கிறாது, அதுதான் தன்னை அதட்டும் தோரணையில் காயத்ரியை மிரட்டுகிறாளோ‘’ என சண்முகநாதன் நினைத்து கொண்டவராய் காயத்ரியின் அருகாமையில் உட்கார்ந்தவர் ஜானகி அம்மாளை பார்த்தார்.

எளிதாய் அவிழ்க்கக்கூடிய சிக்கல் இல்லாத ஒரு முடிச்சை எப்படி, எந்த இடத்தில் கை வைத்து அதை அவிழ்ப்பது என்று தெரியாமல், அம்மா அதை சிக்கல் ஆக்கி விடுவாளோ என யோசித்த காயத்ரி அப்பாவிடம் தானே நேரடியாக பேசிவிடுவது என தீர்மானித்தவளாய், தனது அம்மாவைப்பார்த்து ‘’என்னமா என்கிட்ட பேசனும்னு சொன்ன’’ என கேட்டவள் சற்று நிதானமாக கரணைப்பற்றி நீ அப்பாவிடம் பேசனும், அதையும் நீ என் முன்னாடி பேசனும் அதானே’’ என்றாள்.

காயத்ரி இப்படி கேட்டதும் ஜானகி அம்மாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் இத்தனை நாளாக மனதுக்குள் போட்டு புலப்பிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை சண்முகநாதனிடம் எப்போது பேசலாம், எப்படி பேசலாம் என யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் மிகவும் சர்வ சாதாரணமாக போகிறப்போக்கில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல் காயத்ரி பேச ஆரம்பித்தது ஜானகி அம்மாளுக்கு சூழ்நிலையை இலகுவாக்கியது. மேலும், காயத்ரி என்ன பேசப்போகிறாள் என்பதை தெரிந்து கொள்ள சண்முகநாதன் ஆர்வமானார்.
காயத்ரியும், வெளிப்படையாக அப்பாவிடம் பேசிவிட அப்பாவை பார்த்து பேச துவங்கியவள், அப்பாவை பார்த்த உடன் அவளே அறியாமல் அவளுக்குள் ஒரு தயக்கம் மேலிட்டது. காயத்ரி மௌனமானாள், சண்முகநாதன் ஜானகி அம்மாளை பார்த்தார்,
ஜானகி அம்மாள் காயத்ரியைப்பார்த்து, நீ தான் என் மனசுக்கு புடிச்சிருந்தா இவளை எனக்கு புடிச்சி இருக்குனு உங்ககிட்டேல சொல்ல எனக்கு என்னப்பா தயக்கமுன்னு உனக்கு மாப்பிள்ளை தேடறப்ப சொன்னல்ல, இப்ப ஏன் யோசிக்கற, அப்பாகிட்ட சொல்லிட வேண்டியது தானே, என விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தாள்.
சண்முகநாதனுக்கு ஓரளவு பேசிக்கொண்டிருக்கும் விஷயம் என்னவென்று புரிந்து போனது. காயத்ரி முகத்தை பார்த்தவர். அவள் தலை குனித்து உட்கார்ந்திருந்தாள். காயத்ரி அப்படி தன் முன் அமர்ந்திருப்பது அவள் ஏதோ தவறு செய்துவிட்டு உட்கார்ந்திருக்கும் மனநிலையில் அவள் இருப்பது போல் சண்முகநாதனுக்கு தோன்றியது. அந்த நிலையில், தன் மகளைப்பார்த்தவர், அவருக்குள் அவள் மீது பெரும் இரக்கதை தோற்றுவித்தது. அவளை சகஜநிலைக்கு கொண்டுவர, அங்கு பேசிக்கொண்டிருந்த எந்த விஷயங்களையும் உள்வாங்காமல், அவ்வளவு தானே விடுங்க பார்த்துக்கலாம். நான் இருக்கேன் என சண்முகநாதன் பேசியது காயத்ரி, ஜானகி அம்மாள் இருவருக்கும் ஆச்சரியத்தை தந்தது.
காயத்ரிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் இனம்புரிய மகிழ்ச்சியில் திளைத்தாள். ஜானகி அம்மாவுக்கு ஏதோ சுமக்க முடியா பாரத்தை இறக்கி வைத்தது போல் ஆசுவாசப்பட்டாள்.
