திருச்சியில் 92-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 

0
Business trichy

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில்  92-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி  கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 58 ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் விளையாட்டு சங்கங்களில் இருந்தும் 1,450 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட வீரர்-வீராங்கனைகளுக்கு தனித்தனியாக 23 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. பரபரப்பாக நடந்த இந்த போட்டிகளில் 228 புள்ளிகளை பெற்று செயிண்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) அணி 128 புள்ளிகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தது. சிறந்த தடகள வீரராக செயிண்ட் ஜோசப் அகாடமியை சேர்ந்த சுவாமிநாதனும், சிறந்த வீராங்கனையாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனலெட்சுமியும் தேர்வு செய்யப்பட்டனர்.

web designer

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினார். இதில் போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ, இணை செயலாளர் கனகராஜ், பொருளாளர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

loan point

விழாவில் மாநில தடகள சங்க செயலாளர் லதா பேசும்போது, “மாநில தடகள போட்டியில் வீரர்கள் ஏற்கனவே படைத்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைக்கும்போது சந்தோஷமாக இருக்கும். இதன் மூலம் தேசிய போட்டியில் வென்று விடலாம் என்று தோன்றும். ஆனால் தேசிய போட்டிகளில் அவர்கள் முழுத்திறனை வெளிப்படுத்துவது இல்லை. கடந்த ஆண்டு ஒரு புள்ளியில் நாம் முதலிடத்தை தவறவிட்டு விட்டோம். அடுத்தமுறை முழு நம்பிக்கையுடன் விளையாடி முதலிடத்தை பிடிக்க வேண்டும்” என்றார்.

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.