திருவானைக்காவல் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

0
Business trichy

திருச்சி டவுன்- ஸ்ரீரங்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அகலம் குறைந்த நிலையில் மிகவும் பழமையானதாக இருந்ததால் அதற்கு பதிலாக புதிய மேம்பாலம் கட்டுவதற்கு ரெயில்வே இலாகா அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து 907 மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்த 18-ந் தேதி திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Rashinee album

அப்போது 19-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இந்த பாலத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல்- அமைச்சருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அன்றைய தினம் பாலம் திறக்கப்படவில்லை. இதனால் பாலம் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை இந்த பாலத்தை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பாலத்தின் அருகில் மாம்பழ சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். உடனடியாக வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.

 

திருவானைக்காவல் ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து இனி திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக வாகனங்களில் செல்லலாம். பாலப் பணிகள் நடந்து வந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக வாகனங்கள் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை புறவழிச்சாலை வழியாக நம்பர் ஒன் டோல்கேட் பகுதிக்கு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிக நேரமும், வீண் அலைச்சலும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஆனால் திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்கான அணுகுசாலை, கல்லணை சாலையுடன் இணைப்பதற்கான அணுகுசாலை, திருவானைக்காவல் பகுதிக்குள் செல்வதற்கான அணுகுசாலை பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்த பணிகளை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.