காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள்? உயர்நீதிமன்றம் கேள்வி

0
Business trichy

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி மாவட்டம் உத்தமர்சீலியை சேர்ந்த விஜயகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கின்றன. இதற்கு இடையில் உள்ள முக்கொம்பு முதல் கல்லணை வரையிலான இடம் தீவுப்பகுதியாக அமைந்துள்ளது.

மேலூர், ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், கொண்டையம்பேட்டை, திமிராயசமுத்திரம், பொன்ரங்காபுரம், பனையபுரம், கௌத்தரசநல்லூர், கம்பரசன்கோட்டை பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்கனவே தடுப்பணைகள் அமைந்துள்ளன.

Image

மீண்டும் உத்தமர்சீலி கிராமத்தில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர்பூசத்துறை படித்துறை கிராமத்திற்கும், கிளிக்கூடிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றிமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கும் தடுப்பணை அமைத்தால் இந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் உதவியாக இருக்கும்.

Rashinee album

2011-ம் ஆண்டில் கிளிக்கூடு கிராமத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றிமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் அது முழுமையாக நிறைவேறவில்லை.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைத்து ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளன. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்காக செல்லும் பாலங்கள் வலு இழந்துள்ளன. திடீரென வெள்ளம் வரும்பட்சத்தில் இந்த பாலங்கள் கடும் சேதத்துக்கு ஆளாகும் நிலை உள்ளது.

எனவே உத்தமர்சீலி கிராமத்தில் இருந்து வேங்கூர்பூசத்துறை படித்துறை கிராமம் வரையிலும், கிளிக்கூடு முதல் இடையாற்றுமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமம் வரையிலும் என 2 இடங்களில் தடுப்பணைகள் அமைத்து கொடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன? எத்தனை தடுப்பணைகள் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறையின் (நீர் ஆதாரம்) இணை தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.