தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

0

திருச்சி மலைக்கோட்டை நுழைவு வாயில் வளைவு, சத்திரம் பஸ் நிலையம் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். திருச்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்காக போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தரைக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் வியாபாரம் செய்து வந்த தரைக்கடை வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்துக்கு 4 அமைப்புகளை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் பெண்கள் உள்பட தரைக்கடை வியாபாரிகளின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். கோர்ட்டு உத்தரவை மீறி தரைக்கடைகளை அப்புறப்படுத்திய மாநகராட்சி ஆணையர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நேரில் வரவேண்டும் என அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

food

இதனை தொடர்ந்து கண்டோன்மெண்ட் சரக உதவி போலீஸ் கமிஷனர் மணிகண்டன் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வியாபாரிகள் பிடிவாதமாக மாநகராட்சி ஆணையர் நேரில் வரவேண்டும் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றார்கள். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தரைக்கடை வியாபாரிகளின் பிரதிநிதிகள் 15 பேரை போலீசார் மாநகராட்சி ஆணையருடன் பேசுவதற்காக அழைத்து சென்றனர். ஆணையர் அலுவலகத்தில் இல்லாததால் உதவி ஆணையர் திருஞானம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையின்போது தரைக்கடை வியாபாரிகள், அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் தரைக்கடை நடத்த அனுமதிக்க வேண்டும், தெப்பக்குளம் வடகரை, தென்கரை, பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. சாலை, தேரடி பஜார் பகுதிகளில் சாலையோர கடைகளை அகற்ற வலியுறுத்தக்கூடாது. அதற்கான உத்தரவாதத்தை தர வேண்டும் என கூறினார்கள். இதற்கு பதில் அளித்த உதவி ஆணையர் தரைக்கடை வியாபாரிகளுக்கு ஒரு தனி இடத்தில் (வெண்டிங் ஜோன்) கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உங்கள் கோரிக்கைகளை ஆணையரிடம் தெரிவிக்கிறேன். எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்றார்.

இதற்கு தரைக்கடை வியாபாரிகள் தரப்பில், புதிய இடத்தில் தரைக்கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் வரை தற்போது உள்ள நிலையே தொடர அனுமதிக்க வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தரைக்கடைகளை நடத்திக் கொள்கிறோம் என கூறினார்கள். இதில் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து தரைக்கடை வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.