கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

0
1 full

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது கருஞ்சோலைப்பட்டி மற்றும் பாறைப்பட்டி. இந்த கிராமப்பகுதிகளுக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் இந்த கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகிறார்கள். இதுஒரு புறம் இருக்க, தற்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இப்பகுதி தொழிலாளர்களுக்கு முறையான பணி வழங்கப்படுவதில்லை. அத்துடன் பணி செய்த நாட்களுக்கும் முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே தங்கள் கிராமத்துக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதுடன், முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் கிராம மக்கள் பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

2 full

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கருஞ்சோலைப்பட்டி பகுதியில் மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் நேற்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலர் சந்திரசேகர் மற்றும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து உங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

3 half

Leave A Reply

Your email address will not be published.