
உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடனால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அடுத்து ஆண்டுதோறும் கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
மனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர… சகோதரிகளே…’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” – திருவள்ளுவர்
கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று கூறுகிறார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார்
“நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை” என்றார் கன்ஃபூசியஸ்.

சுயநலப்போக்கே எங்கும் தலைவிரித்தாடும் இந்த காலக்கட்டத்தில் மனிதநேயநாள் கொண்டாட வேண்டிய சூழலில் நாம் உள்ளோம்.
