காவலர்களை உற்சாகப்படுத்தும் உயர் அதிகாரிகள்!

0

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் காவல் துறையினரை மையப்படுத்தும் ஒரு பாடலில், ‘நல்ல நாளுலேயும் வீட்டுல தங்கல, கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல’ என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். அதுதான் நிதர்சனமும்கூட. வார விடுமுறை நாட்கள், விசேஷ தினங்கள், பிறந்த நாள், திருமண நாள் என அனைத்தையும் குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் அன்றைய தினத்தில்கூட காவல் துறையினர் பணிக்கு ஆஜராகிவிடுவர்.

இதன் காரணமாகவும் பணியிட டார்ச்சர் மற்றும் மன அழுத்தத்தாலும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். பணியில் இருக்கும்போதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழப்பதும், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்வதும் காவல் துறையினரிடயே சமீப காலமாக அதிகமாகியுள்ளது. மேலும் விடுமுறைகூட அளிக்கவில்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்ததுண்டு.
காவலர்களின் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் பொருட்டு கவுன்சலிங் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க காவலர்களைப் பாராட்டுவது, திருமண நாள், பிறந்த நாட்களில் வாழ்த்துகள் சொல்வது என அவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் நோக்கில் தனிப்பட்ட முறையிலும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள் சில காவல் அதிகாரிகள்.

 

food

கடலூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்டத்தில் உள்ள காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், அவர்களைக் குடும்பத்தோடு வரவழைத்துச் சிறப்பு நிபுணர்கள் மூலமாக கவுன்சலிங் கொடுத்துவருகிறார். பணியில் உள்ளவர்களைக் காலையில் எழுந்து உடல் பயிற்சிகளைக் கட்டாயம் செய்யச் சொல்லி புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார். பிறந்த நாள், திருமண நாட்களில் மறக்காமல் ஓப்பன் மைக்கிலும், கைப்பேசியிலும் அழைத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அதோடு இனிப்புகளையும் வழங்கிவருகிறார்.

 

இதுபோலவே மதுரை மாநகரக் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சிறப்பாக பணியாற்றுபவர்களைப் பாராட்டுவதோடு, அவர்களோடு புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார். காவலர்களின் பிறந்த நாள், திருமண நாட்களை அறிந்து அவர்களுக்கு நேரிலும் தொலைப்பேசி மூலமாக வாழ்த்து தெரிவிக்கிறார். ஆணையரே லைனில் வந்து வாழ்த்து தெரிவிப்பதைப் பூரிப்புடன் சொல்கிறார்கள் காவல் துறையினர்.
திருப்பூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் கயல்விழி, தனது மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை அதிகாரிகளிடமும், ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியிடமும் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். தங்கள் லிமிட்டில் பணி செய்யும் காவலர்கள், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், டிஎஸ்பி போன்றவர்களின் பிறந்த நாள், திருமண நாட்களைச் சேகரித்து வைத்து ஒருநாள் முன்பு தனக்குத் தெரியப்படுத்துமாறு கூறியுள்ளார்.

அதேபோல் ஒவ்வொரு நாளும் மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள், காவலர்களின் விசேஷ நாட்களை எஸ்பி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூலமாகத் தெரிந்துகொண்டு சம்பந்தப்பட்டவர்களை ஓப்பன் மைக்கில் அழைத்தும், மடல் அனுப்பியும் வாழ்த்து தெரிவிக்கிறார். அன்றைய தினத்தைக் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகச் செலவிட விடுமுறையும் வழங்குகிறார். இதை அவர்கள் ஒப்பன் மைக்கில் பேசும்போதே நாம் தெரிந்துகொள்ள நேர்ந்தது.
காவலர்களுக்குப் புத்துணர்வு அளிக்கும் இதுபோன்ற செயல்கள் பாராட்டுக்குரியவையே.

gif 4

Leave A Reply

Your email address will not be published.